சந்திரயான் 3 ISRO Twitter
டெக்

சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் நேரம் மாற்றம்!

Prakash J

சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி எல்.வி.எம் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 179 கிலோமீட்டர் உயரத்தில் புவி சுற்றுவட்ட பாதையில் அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலம், 16 நிமிடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு சந்திரயான் 3 விண்கலம் சென்றது.

அப்படி நிலவின் சுற்றுவட்ட பாதையில் விண்கலம் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. தொடர்ந்து லேண்டரில் உள்ள கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் காணொளியையும் இஸ்ரோ வெளியிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 17ஆம் தேதி, உந்துவிசை தொகுதியிலிருந்து வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது. லேண்டரை தரையிறங்க ஆயத்தம் செய்யும் கடைசி உயரக்குறைப்பு நடவடிக்கை இன்று (ஆகஸ்ட் 20) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இப்போது லேண்டர் நிலவின் மேற்பரப்பில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.

விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மென்மையான தரையிறக்கத்தை உறுதிசெய்வதற்காக தரையிறங்கும் நேரம் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதேநாளில், மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் இறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை சுமார் 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது. அனைவரின் வாழ்த்துகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி.

அனைவரும்,

இஸ்ரோ இணையதளம் https://isro.gov.in

யூடியூபில் https://youtube.com/watch?v=DLA_64yz8Ss என்ற முகவரியிலும்

ஃபேஸ்புக்கில் https://facebook.com/ISRO என்ற முகவரியிலும்

டிடி நேஷனல் தொலைக்காட்சியிலும்

ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5.27 மணியில் இருந்து நேரலையைக் காணலாம்'' என்று தெரிவித்துள்ளது.