நாமக்கல்லில் நிலவில் இருப்பதை போன்ற மண் புதிய தலைமுறை
டெக்

நிலவில் உள்ளதைப் போன்ற மண்... நம்ம நாமக்கல்ல! சந்திரயான்-3 லேண்டிங்கை பரிசோதித்த விஞ்ஞானிகள்?

நாமக்கலிலுள்ள குன்னமலை - சித்தம்பூண்டி பகுதியில் கிடைப்பது அனார்தசட் மண் என தெரியவந்துள்ளது. இது நிலவில் உள்ளதைப் போன்ற மண் என்பதால், இங்கு சந்திரயான்-3 ன் லேண்டர், ரோவர் சரியாக இறங்குகிறதா என சோதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

Jayashree A

நிலவில் தடம் பதிப்பதற்கு முன்பாக நாமக்கல் மண்ணில் சந்திரயான்-3 தடம் பதித்துள்ளது. வல்லரசு நாடுகளுக்குப் போட்டியாக, நமது இஸ்ரோ நிறுவனம் நிலவை ஆராய்வதற்காக, 2008-ஆம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.

சந்திரயான் - 3

வடதுருவத்தில் தரையிறங்கிய அந்த விண்கலம் நிலவின் பரப்பில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, 2019-ஆம் ஆண்டு சந்திரயான்-2, ஜிஎஸ்எல்வி-எம்கே-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், அந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியதால் அத் திட்டம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில். சந்திரயான் விண்கலத்திலுள்ள லேண்டரும் ரோவரும் நிலவில் சரியாகத் தரை இறங்குகிறதா என்பதை சோதித்துப் பார்க்க நிலவில் உள்ளதைப் போன்ற மண் தேவைப்பட்டது.

நாசாவில் ஒரு கிலோ நிலவு மண் 15,000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் இதுபோன்ற மண் வேறெங்கும் உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். அந்த வகையான அனார்தசட் மண், நாமக்கலிலுள்ள குன்னமலை மற்றும் சித்தம்பூண்டி பகுதியில் கிடைப்பது தெரியவந்தது. அந்த மண் மாதிரிகளைக் கொண்டு சந்திரயான்-2 லேண்டர் மற்றும் ரோவர் சரியாக இறங்குகிறதா என இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதித்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்திரயான்-3 விண்கலமும் அவ்வாறே சோதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து நாமக்கல் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் கேட்டபோது, புதிதாக மண் எதுவும் எடுத்துச் செல்லப்படவில்லை என்றும் கடந்த முறை கொண்டு சென்ற மண்ணை வைத்தே இஸ்ரோ சோதித்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.