chandrayaan 3 puthiya thalaimurai
டெக்

லேண்டரில் இருந்து பிரிந்து தனித்து இயங்கும் ரோவர்! 14 நாட்களில் அரிய அதிசயத்தை காணவுள்ள இந்தியா!

ரோவர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ விரைவில் வெளியிடும் என தெரிவிக்கப்படுகிறது.

PT WEB

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6:04 மணிக்கு நிலவில் கால்பதித்த நிலையில், அதில் உள்ள அறிவியல் ஆய்வு ஊர்தியான பிரக்யான் ரோவர், எப்போது வெளியே வரும் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரை லெண்டரில் இருந்து வெளியேற்றுவதற்கான அனைத்து அமைப்புகளும், சென்சார்களும் தயாராக இருக்கிறதா என்பதைச் சரி பார்த்தனர். அதன் பின்னர், இரண்டு மணி நேரத்தில் விக்ரம் லேண்டரில் உள்ள சாய்வு தளம் திறந்தது. அடுத்த 30 நிமிடத்தில் லேண்டருக்குள் இருக்கும் பிரக்யான் ரோவரின் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது. அடுத்த மூன்று மணி நேரத்தில், ரோவர் சாய்தளம் வழியே தனது ஆறு சக்கரங்கள் மூலம் நிலவின் பரப்பை அடைவதற்காக உருண்டது.

சந்திரயான் 3

பிரக்யான் ரோவரின் ஆறு சக்கரங்களும் முழுமையாக நிலவின் மேற்பரப்பை அடைந்தவுடன் அதில் மூடப்பட்டிருந்த சோலார் தகடுகள் தானியங்கியாக சூரியத் திசையை நோக்கி விரிந்தது. லேண்டர் தரையிறங்கி நான்கு மணி நேரத்தில் ரோவர் தனது இயக்கத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் ஒரு சிறிய இலக்கை அடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்பின்னர் இஸ்ரோ சார்பில் வெளியிடப்பட்ட குறிப்பில் நிலவின் மேற்பரப்பில் இந்தியா வலம்வரத் தொடங்கியதாக தெரிவித்தது. ஆறு சக்கரங்கள் கொண்ட ரோவர் ஊர்தி வெறும் 26 கிலோ எடை கொண்டது. ஆறு சக்கரங்களும் இரண்டு அறிவியல் ஆய்வுக் கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

நிலவின் மேற்பரப்பு குறித்த தரமான ஆய்வுகளை மேற்கொள்ளும் விதமாக நிலவின் மண்ணில் உள்ள வேதியியல் கலவைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு தகவல்கள் அனுப்பும். மக்னீசியம், அலுமினியம், சிலிகான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம், இரும்பு உள்ளிட்டவற்றின் மூலக்கூறுகள் குறித்து நிலவின் பாறைகளிலும், மணலிலும் ஆய்வு மேற்கொள்ளும்.

சந்திரயான் 3

ரோவரில் இரண்டு கேமராக்கள் உள்ளன. அதன்மூலம் லேண்டரில் இருந்து ரோவர் எந்த திசையில் இருக்கிறது, எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். மேலும் தொலைத்தொடர்பு அனுப்புவதற்கும் பெறுவதற்கும் லேண்டரில் உள்ள சூரிய மின்தகட்டில் இரண்டு ஆண்டனாக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக ரோவர் நிலவின் ஒரு சிறிய தொலைவை வலம்வந்து லேண்டர் மற்றும் நிலவின் மேற்பரப்பின் புகைப்படங்களை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரோவர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ விரைவில் வெளியிடும் என தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து விஞ்ஞான் பிரஷார் அமைப்பு, முதன்மை விஞ்ஞானி டிவி வெங்கடேஸ்வரன், ”ரோவரில் இருந்து வரும் அனைத்து தகவல்களும் லேண்டருக்கு அனுப்பப்பட்டு லேண்டரில் இருந்து நிலவைச் சுற்றி வரும் சந்திரயான் 2 ஆர்பிட்டர் தகவல் அனுப்பி பூமிக்கு வந்தடையும். இந்த தகவல்கள் பூமியை வந்தடைய 1.3 வினாடிகளில் இருந்து 2.5 வினாடிகள் ஆகும் என கூறப்படுகிறது. ரோவரின் செயல்பாடுகள் மற்றும் தொலை தொடர்புகளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் கூர்ந்து கவனித்து வருகிறது. நிலவின் தென்பகுதியில் இதுவரை எந்தவிதமான விண்கலமும் இறங்காத நிலையில் தற்போது இந்தியாவின் லேண்டர் மற்றும் ரோவர் இறங்கியுள்ளதால் அதிலிருந்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் முக்கியமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

chandrayaan 3

மேலும் நிலவில் தொடக்க நிலை மற்றும் நிலவைப் பற்றிய ஆய்வு குறித்து விஸ்தரிக்க பயனுள்ளதாக இருக்கும். நிலவின் பகல் பொழுது தொடங்கியுள்ள நேரத்தில், லேண்டர் மற்றும் ரோவர் தரையிறங்கியுள்ள நிலையில் அடுத்த 14 நாட்களில் இரண்டும் சேர்ந்து ஏழு விதமான அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

சந்திரயான் 3 திட்டத்தின் அறிவியல் ஆய்வுகளை எதிர்நோக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த அறிவியல் உலகமே காத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.