விக்ரம் லேண்டர் நிலை கொண்டிருக்கும் பகுதியில் தற்போது இரவுபொழுதாக இருக்கும் நிலையில், லேண்டர் மற்றும் ரோவர் ஸ்லீப் மோடில் உள்ளது. சந்திரயான் 3 லேண்டர் நிலவில் இருக்கும் இடம் குறித்து சந்திரயான் 2 திட்டத்தின் ஆர்பிட்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.
“இந்தப் புகைப்படமானது DFSAR என்ற ரேடார் கருவி மூலம் கடந்த ஆறாம் தேதி எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ரேடார் கருவி சந்திரயான் இரண்டு ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டிருந்தது. இந்த ரேடார் கருவி சந்திரயான் மூன்று திட்டத்தில் நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் எங்கு தரையிறங்க வேண்டும் என்பதை தொடர்ந்து நிலவை சுற்றி வந்து ஆராய்ச்சி செய்து புகைப்படம் எடுத்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
DFSAR ரேடார் கடந்த 4 ஆண்டுகளாக நிலவின் துருவ அறிவியலில் முக்கிய கவனம் செலுத்தி நிலவின் மேற்பரப்பைப் படம்பிடித்து அனுப்பி வரும் நிலையில், சிவசக்தி பகுதியில் நிலை கொண்டுள்ள விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
ஜூன் 2ம் தேதி, விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு முன் அந்த பகுதியை எடுத்த புகைப்படத்தையும், லேண்டர் தரையிறங்கிய பின் எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு இஸ்ரோ வெளியிட்டுள்ளது.