டெக்

நிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி பயணித்த சந்திரயான்- 2

நிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி பயணித்த சந்திரயான்- 2

Rasus

சந்திரயான் - 2 விண்கலம் புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து நிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி இன்று பயணிக்க தொடங்கியது.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம் 22-ஆம் தேதி சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.

இந்த விண்கலம் 5 கட்டங்களாக புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டு நிலவின் வட்டப்பாதையை சென்று அடையும் எனக் கூறப்பட்டது. அதன்படி சந்திரயான் - 2 விண்கலம் புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து, நிலவின் சுற்றுவட்டப்பாதையை நோக்கி இன்று பயணிக்க தொடங்கியது. இந்தப் பாதை மாற்ற நடவடிக்கையை பெங்களூரு தரைக்கட்டுப்பாட்டு நிலைய விஞ்ஞானிகள் அதிகாலை 2.21 மணியளவில் மேற்கொண்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் - 2 விண்கலம் வரும் 20-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு முற்றிலும் மாறும் என்றும் நிலவின் தரைப்பகுதியில் விண்கலம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி இறங்க வாய்ப்புள்ளதாகவும் சிவன் தெரிவித்துள்ளார். நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு மாறும் முன் சந்திரயான்- 2 பூமியை 5 பாதைகளில் சுற்றிவந்தது குறிப்பிடத்தக்கது.