வரும் ஆண்டுகளில் 7000 மின்சார பேருந்துகள், ஐந்து லட்சம் மின்சார 3 சக்கர வாகனங்கள், 55,000 மின்சார 4 சக்கர பயணிகள் கார்கள் மற்றும் 10 லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்ய மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
டெல்லி, மகாராஷ்டிரா, கோவா, குஜராத் மற்றும் சண்டிகருக்கு 670 மின்சார பேருந்துகளையும், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, குஜராத் மற்றும் போர்ட் பிளேர் ஆகிய மாநிலங்களில் 241 மின் சார்ஜிங் நிலையங்களையும் அமைக்க மத்திய அரசு 'ஃபேம் இந்தியா' திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் முடிவு செய்துள்ளது.
மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் "சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து பற்றிய பிரதமரின் முன்னெடுப்புக்கு இது மிகப்பெரிய உந்துதலாக இருக்கும். பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டை குறைக்க இந்த முயற்சி உதவும்" என்று கூறினார்.
மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக கனரக தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள கனரக தொழில்துறை திணைக்களம் (டிஹெச்ஐ) 2015 ஏப்ரல் முதல் இந்தியாவில் “ஃபேம் இந்தியா” திட்டத்தை நிர்வகித்து வருகிறது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, மார்ச் 31, 2019 வரை, சுமார் 2,80,987 ஹைபிரிட் மற்றும் மின்சார வாகனங்கள் உற்பத்திக்காக சுமார் 350 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டன. மேலும், மொத்தம் சுமார் 280 கோடி ரூபாய் செலவில் 425 மின்சார மற்றும் ஹைபிரிட் பேருந்துகளை நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு டி.எச்.ஐ வழங்கியது. ஃபேம் இந்தியா திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் பெங்களூரு, சண்டிகர், ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் 520 மின் சார்ஜிங் நிலையங்களை அமைக்கவும் கனரகத் தொழில்துறை அனுமதி அளித்தது.
தற்போது, ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1, 2019 முதல் மூன்று ஆண்டுகளுக்கு ரூ .10,000 கோடி மொத்த பட்ஜெட்டுடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த இரண்டாம் கட்டத்தின் கீழ் பொது மற்றும் பகிரப்பட்ட வாகன போக்குவரத்தை மின்மயமாக்குவதில் அரசு கவனம் செலுத்துகிறது .
ஏறக்குறைய 7000 மின்சாரபேருந்துகள், ஐந்து லட்சம் இ -3 சக்கர வாகனங்கள், 55,000 இ -4 சக்கர பயணிகள் கார்கள் மற்றும் 10 லட்சம் இ -2 சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. கூடுதலாக, மின்சார வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு தேவையான சார்ஜிங் ஸ்டேசன்கள் உள்கட்டமைப்பை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.