பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு எளிதாகவும் இருக்கும் தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பும் சேவை ஆண்டுக்கு 20% அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வாட்ஸ் அப், ஃபேஸ் புக் உள்ளிட்டவைகள் மூலம் தகவல்கள் பரிமாற்றம் அதிகரித்திருந்தாலும், செல்போன் மூலம் அனுப்பபடும் எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுந்தகவல் சேவை ஆண்டுக்கு 20 சதவிகிதம் அதிரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எஸ்.எம்.எஸ் அனுப்புவது அழிந்தே போயிருக்கும் என பலரும் நினைக்கும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை அதன் மூலம் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மாதமும் தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலம் சுமார் 2 ஆயிரத்து 200 கோடி குறுந்தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் விளம்பரங்கள், பொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவைகளை தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்புவது அதிகரித்துள்ளது. அதேவேளையில், நபருக்கு நபர் தகவல் பரிமாற்றம் குறைந்து வருவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.