டெக்

வாட்ஸ்-அப் ‘மர்ம மெசேஜ்’ : போன் முடங்கிவிடும் ஜாக்கிரதை!

வாட்ஸ்-அப் ‘மர்ம மெசேஜ்’ : போன் முடங்கிவிடும் ஜாக்கிரதை!

webteam

வாட்ஸ்-அப்பில் பரவும் சில மர்ம மெசேஜ்கள் ஸ்மார்ட்போனை முடக்கும் அளவிற்கு ஆபத்தானவை என்பது தெரியவந்துள்ளது.

தற்போதைய காலக் கட்டத்தில் செல்போன் இன்றி வாழ்பவர்களை பார்ப்பது கடினம். சிட்டி முதல் பட்டி-தொட்டி வரை செல்போன் பரவிக்கிடக்கிறது. ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் ஊரில் ஒரு சிலர் கூட இல்லை. இதேபோன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவருமே வாட்ஸ்-அப் பயன்படுத்துகின்றார்கள் என்று கூறலாம். வாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்பிக்கொள்வது, வாட்ஸ்-அப் குரூப்பில் உரையாடுவது என ஒரே நாளில் மணிக்கணக்கான நேரங்களை அதில் இளைஞர்கள் உட்பட அனைவரும் செலவிடுகின்றனர்.

ஸ்மார்ட்போனில் வாட்ஸ்-அப் செயல்பாடு பற்றி கடந்த காம்ஸ்கேர் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை உலகம் முழுவதும் நடத்தியது. அதில் இந்தியாவில்தான் அதிகமானோர் மொபைல் வாட்ஸ்-அப் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதும், அதிகளவு நேரத்தை செலவழிப்பது தெரியவந்தது. கடந்த 2017ஆம் ஆண்டில் இந்தியர்கள் 98 சதவிகிதம் மொபைல் வாட்ஸ் அப் செயலி மூலமும், 2 சதவிகிதம் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் தகவல் பரி‌மாற்றம் செய்துள்ளதும் தெரியவந்தது. சர்வதேச அளவில் மொபைல் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிட்டதிலும் இந்தியா தான்முதலிடத்தில் உள்ளது. 

இந்த அளவிற்கு வாட்ஸ்-அப் செயலியுடன் இந்தியர்கள் ஒன்றி இருக்கையில், அதனை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டியதும் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஏனெனில் அண்மைக்காலமாக வாட்ஸ்-அப் மூலம் குற்றங்கள் அதிகரித்து வருவதும் ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான குற்றங்களுக்கு வாட்ஸ்-அப் முக்கிய காரணமாக இருப்பதும் அதில் தெரியவந்துள்ளது. சில வாட்ஸ்-அப் மெசேஜ்களில் ‘உங்களுக்கு புதிய போன் பரிசாக வேண்டுமா?, ரூ.1 லட்சம் ஜெயிக்க வேண்டுமா?, புதிய கார் வெல்ல வேண்டுமா? உடனே லிங்கை கிளிக் செய்யுங்கள்’என்பது போன்ற சில லிங்க்குகள் வரும். அவற்றை கிளிக் செய்ததும், உங்கள் இ-மெயில், செல்போன் நம்பர் போன்ற சில தகவல்களை பதிவு செய்யுமாறு கேட்கும். நீங்கள் பதிவு செய்து சமர்பித்த பின்னர் அந்த லிங்க் மூடிக்கொள்ளும். பின்னர் எந்த தகவலும் வராது? நீங்கள் பரிசு வென்றீர்களா என்றால் இல்லை. நீங்கள் ஏமாந்து உங்கள் தகவலை யாருக்கோ வழங்கிவிட்டீர்கள் என்பது தான் உண்மை. இதன்மூலம் பல நூதன மோசடிகள் செய்யப்படுகின்றன. உங்கள் வாட்ஸ்-அப் நம்பர் மற்றும் இ-மெயிலை வைத்து யாரோ ஒரு நபர் உங்களை, உங்கள் செல்போன் கேமராக்கள் மூலம் கூட கண்காணிக்கக் கூடும். இதுபோன்று வாட்ஸ்-அப்பிலும் பல சிக்கல்கள் உள்ளன.

இந்நிலையில் அண்மைக்காலமாக வாட்ஸ்-அப் மூலம் பரவும் மற்றொரு அபாயம் தான் ‘ப்ளாக் டாட்’ அல்லது ‘மெசேஜ் பாம்’ என்று அழைக்கப்படும் ‘மர்ம மெசேஜ்’. இந்த மெசேஜ்கள் உங்கள் நண்பர்கள் மூலம் கூட வாட்ஸ்-அப் குரூப்பிலோ அல்லது தனிப்பட்ட வகையிலோ பகிரப்படலாம். ‘இந்த மெசேஜை கிளிக் செய்தால் உங்கள் வாட்ஸ் முடங்கும்’ என்று குறிப்பிட்டுக் கூட பகிரப்படலாம். இதுபோன்ற மெசேஜ்களில் இடையே சில குறியீடுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அவற்றை நீங்கள் கிளிக் செய்ததும், உங்கள் வாட்ஸ்-அப் செயலியின் புரோக்ராம்களை அவை பாதிக்கக்கூடும். இதனால் உங்கள் வாட்ஸ்-அப் சில நிமிடங்கள் முடங்கும். ஆனால் அந்த ‘ப்ளாக் டாட்’ உங்கள் போனிலேயே தங்கி, நாளடைவில் உங்கள் போனில் உள்ள புரோக்ராம்களையும் பாதிக்கக்கூடும். இதன்மூலம் உங்கள் ஸ்மார்ட்போனே முடங்கும் நிலை உண்டாகும். எனவே தேவையற்ற லிங்க்குகள் மற்றும் மர்ம மெசேஜ்களை தவிர்ப்பது நல்லது என தொழில்நுட்ப ஆர்வலர்கள் கூறுகின்றனர்.