பென்னு நாசா
டெக்

”விண்வெளியில் இருக்கும் சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்” பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்

ஒரு விண்வெளி வீரர் தனது உடல் எடை மற்றும் ஆற்றல் நிலைகளை பராமரிக்க ஒரு நாளைக்கு சுமார் 1.2 கிலோகிராம் உணவை உட்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

Jayashree A

விண்வெளியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவைப்படும் உணவுகள் அனைத்தும் பூமியிலிருந்து கொண்டு செல்லப்படுகிறது. இதனால், விண்வெளிநிலையத்தில் இருக்கும் வீரர்கள் தேவைக்கு அதிகமாக உணவு எடுத்துக்கொள்ளாமல் அளவுடன் சாப்பிட்டு வருகின்றனர். இவர்களின் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்திச் செய்யும் பொருட்டு ஆய்வாளர்கள் விண்வெளியில் உணவு தயாரிப்பது எப்படி என்ற ஒரு ஆய்வை நிகழ்த்தினர். அவர்களின் ஆய்வின் முடிவில், விண்வெளியைச் சுற்றிவரும் பென்னு போன்ற சிறுகற்களிலிருந்து உணவினைப்பெறமுடியும் என்கிறார்கள். ஆச்சரியமளிக்கும் இவர்களின் ஆராய்ச்சி கூறுவது என்ன?

ஒரு விண்வெளி வீரர் தனது உடல் எடை மற்றும் ஆற்றல் நிலைகளை பராமரிக்க ஒரு நாளைக்கு சுமார் 1.2 கிலோகிராம் உணவை உட்கொள்ள வேண்டும் என்கிறார்கள். என்ன 1.2 கிலோகிராமா என்கிறீர்களா? ஆம்...

பூமியில் உள்ளவர்களை விட விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்கு வெவ்வேறு வகையான ஊட்டச்சத்து அதிகம் தேவைப்படுகிறது. காரணம், விண்வெளி வீரர்கள், விண்வெளி நிலையத்தில், அதிர்வு, சத்தம், எடையின்மை, காஸ்மிக் கதிர்வீச்சு மற்றும் விண்வெளிப் பயணத்தில் உள்ளார்ந்த கடுமையான வெப்பநிலை மாற்றங்கள் உள்ளிட்ட தனித்துவமான அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். ஆகையால் அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு அவசியமாகிறது.

விண்வெளி வீரர்களுக்கு இத்தனை ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அனைத்தும் பூமியிலிருந்து விண்வெளிக்கு பயணமாகிறது. இதுவிலை உயர்ந்த மற்றும் தளவாட ரீதியாக சிக்கலாக இருக்கிறது. இதைத்தவிர்க்கும் பொருட்டு விஞ்ஞானிகள் விண்வெளியில் வளர்க்கப்படும் உணவினைக்குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

விண்வெளி நிலையத்தில் விவசாயம் செய்வது , சாத்தியம் என்றாலும், சிக்கலானது மற்றும் இடப்பற்றாகுறையும் ஏற்படுத்தும். எதிர்காலத்தில் சூரிய மண்டலத்தின் வெளிப்புறப் பகுதிகளுக்கு - அல்லது அதற்கு அப்பாலிருக்கும் பயணங்களுக்கு போதுமான உணவை பென்னு போன்ற சிறுகோளிலிருந்து பெறமுடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

வெஸ்டர்ன் யுனிவர்சிட்டியின் இன்ஸ்டிடியூட் ஃபார் எர்த் அண்ட் ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஆராய்ச்சியாளர்கள் , நுண்ணுயிரிகள் , மற்றும் சிறுகோள்களில் காணப்படும் கரிம சேர்மங்களைப் பயன்படுத்தி உண்ணக்கூடிய உயிர்ப்பொருளை, அதாவது உணவை உற்பத்தி செய்வதற்கான வழியைக் கண்டறிந்துள்ளனர் .

அவர்களின் ஆய்வின் படி ஆக்ஸிஜன் இல்லாத சூழலில் சிறுகோள்களில் காணப்படும் கரிம சேர்மங்களை உடைக்க அதிக வெப்பத்தைப் பயன்படுத்த வேண்டும் - இது பைரோலிசிஸ் என அழைக்கப்படுகிறது. இதன் விளைவாக உடைந்த சிறுகோளில் உருவாகும் ஹைட்ரோகார்பன்கள், நுண்ணுயிரிகளுக்கு உணவாகிறது. நுண்ணுயிரிகள் கரிமப் பொருட்களை உட்கொண்டு மனிதர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உயிரியலை உருவாக்குகின்றன,

இவர்களின் ஆய்வின்படி 10.5% நீர் மற்றும் கணிசமான அளவு கரிமப் பொருட்களைக் கொண்ட கார்பனேசியஸ் காண்டிரைட்டுகள் எனப்படும் ஒரு குறிப்பிட்ட வகை பென்னு போன்ற சிறுகோள் மீது ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தினர்.

asteroid

இத்தகைய சிறுகோள்கள் 600 முதல் 17,000 விண்வெளி வீரர்களின் வாழ்நாளை ஆதரிக்க போதுமான கலோரிகளுடன் சுமார் 50 முதல் 6,550 மெட்ரிக் டன் உண்ணக்கூடிய உயிர்ப்பொருளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் . எனவே, சிறுகோள்கள் நீண்ட கால விண்வெளி பயணத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து அதிக அளவில் உணவை பெருவதற்குப் பதிலாக, விண்வெளியில் சிறு கோள்களில் கிடைக்கும் உணவைப்பயன்படுத்தமுடியும் .

இருப்பினும், இந்த ஆராய்ச்சியில், விண்வெளி வீரர்கள் தங்களின் பயணங்களின் போது சிறுகோள்கள் எவ்வாறு வெட்டப்பட்டு செயலாக்கப்படும் என்பதையும், அதன் விளைவாக வரும் உணவு நுகர்வுக்கு ஏற்றதாகவும் சுவையாகவும் இருக்குமா? என்பது பற்றியும் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

இருப்பினும் இவர்களின் இந்த ஆய்வானது நம்பிக்கைக்குரியதாக இருந்தாலும், எதிர்காலத்தில் இது சாத்தியப்படுமா? என்ற நமது கேள்விக்கு ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு நமக்கு பதிலுரைக்கும்.