மாதிரி படம் புதியதலைமுறை
டெக்

466 மில்லியன் ஆண்டுகள்..சனி கிரகத்தைப் போன்று பூமியைச் சுற்றி வளையத்தை ஏற்படுத்திய சிறுகோள்! எப்படி?

சனி கிரகத்தில் இருக்கும் வளையத்தைப் போன்று பூமியில் 466 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வளையம் இருந்ததாக ஆராய்ச்சியாளார்களின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

Jayashree A

சனி கிரகத்தில் இருக்கும் வளையத்தைப் போன்று பூமியில் 466 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வளையம் இருந்ததாக ஆராய்ச்சியாளார்களின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

நமது சூரிய குடும்பத்தில் சனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருப்பது போல பூமியிலும் சுமார் 466 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வளையம் இருந்திருக்கலாம். இந்த வளையமானது சிறுகோள் உடைந்து அதன் குப்பையால் ஏற்பட்டு இருக்கலாம் என்று ஆராய்சியாளார்கள் கூறுகின்றனர். இதைப்பற்றி விரிவாகப்பார்க்கலாம்.

பூமி

சுமார் 466 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியை நோக்கி அளவில் பெரிய ஒரு சிறுகோள் வந்துள்ளது. அந்த சிறுகோள் பூமியின் ரோச் எல்லையை கடக்கும் பொழுது சுக்கு நூறாக உடைந்து பூமியைச் சுற்றி குப்பை வளையத்தை உருவாக்கி உள்ளது. அதாவது சனி கிரகத்தைச் சுற்றி காணப்படும் வளையம் போன்று பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பூமியைச்சுற்றி சிறுகோளானது ஒரு வளையத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த கால கட்டத்தில் சூரியனின் வெப்பம் தடுக்கப்பட்டு பூமியானது குளிர்ந்திருக்ககூடும். அதன் பிறகு படிப்படியாக இந்த வளையத்தில் இருந்த நொறுங்கிய பாகங்கள் பூமி மீது விழுந்து அப்பகுதியில் பள்ளத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார் ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் கிரக அறிவியல் பேராசிரியரான ஆண்டி டாம்கின்ஸ்.

பூமத்தியரேகை பகுதியை ஒட்டி இருக்கும் 21 பள்ளங்களை அவர்கள் ஆராயும் பொழுது அனைத்து பள்ளங்களும் சங்கிலியைப்போன்று ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டுள்ளதாக அவர்களுக்கு தெரியவந்தது. மேலும், ஐரோப்பா, ரஷ்யா, மற்றும் சீனாவில் காணப்படும் பள்ளங்களில் ஒரே போன்று சுண்ணாம்பு படிவங்கள் ஏராளமாக காணப்படுவதாகவும் இவை வளையங்களின் எச்சங்கள் என்றும் கூறுகிறார்.

சிறு கோள் தாக்கத்தால் இப்பகுதியின் ஆழத்தில் இருந்த டெக்டோனிக் தகடானது நகர்ந்து அப்பகுதிகளில் கண்டங்களும் பள்ளங்களும் உருவாகி இருக்கலாம். என்றும் ஆண்டிடாம்கின்ஸ் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.