டெக்

ஐபோன் விலையை குறைக்க திட்டம் ?

webteam

ஆப்பிள் நிறுவனம் சில ஐபோன் மாடல்களின் விலையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

சமீப காலமாக சந்தையில் அறிமுகமான ஐ போன்களின் விலை அதிகமாக இருப்பதாகவே வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதிக விலை காரணமாக செல்போன் சந்தையில் ஐ போன்களின் விற்பனை சரிவை சந்தித்தாகவும் தெரிகிறது. இதனைக் கவனத்தில் கொண்டுள்ள ஐ போன் நிறுவனம் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எந்தெந்த நாடுகளில் விலை குறைப்பு நடைமுறைக்கு வரப்போகிறது என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சீனாவில் ஏற்கெனவே விலை குறைப்பை விற்பனையாளர்கள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்ட 12 ஆண்டுகளில் விலை குறைக்கப்படுவது இது இரண்டாம் முறையாகும். அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகளில் இந்த விலைக்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருவது தான் என அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் ‌செல்போன் சந்தையில் ஆப்பிள் தனது மவுசைக் இழந்து வருவதே விலைக்குறைப்புக்கு கா‌ரணம் எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி குக், சில நாடுகளின் சந்தைகளில் ஆப்பிள் ஐ போன்களின் விலையை மாற்றியமைக்க எங்கள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஒரு வருடத்துக்கு முன்பு என்ன விலையில் கிடைத்ததோ அதே விலையில் ஐ போன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதை கவனித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பால் ஐ போன்களின் விற்பனையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.