ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கண்டறியும் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை உருவாக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக், நிறுவன வளாகத்தில் அந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுடன் வலம் வந்திருக்கிறார். அந்த ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்சை ரத்த குளுக்கோஸ் அளவைக் கண்டறியும் சாதனத்துடன் இணைத்து, உடற்பயிற்சி செய்யும்போதும், உணவு உட்கொள்ளும்போதும், ஒருவரது சர்க்கரையின் அளவு எவ்வாறு மாறுபடுகிறது என்பதை நிறுவன ஊழியர்களுக்கு விளக்கியிருக்கிறார்.
ஊசியின் மூலம் ரத்தத்தை வெளியே எடுக்காமலேயே, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்டறியும் சென்சார்களைக் கொண்ட ஸ்மார்ட்வாட்ச்களைக் கண்டுபிடிப்பது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் கனவாக இருந்தது. இதற்கு வடிவம் கொடுக்கும் நவீன சென்சார்களைத்தான் ஆப்பிள் நிறுவன பயோமெடிக்கல் என்ஜினியர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.