கடினமான வேலைகளைக்கூட கணினியின் உதவியோடு எளிதாகச் செய்யும் காலம் இது. இந்த வளர்ச்சியைப் பயன்படுத்தி உசிலம்பட்டி சேர்ந்த பெண்கள் வித்யாசமான ஸ்மார்ட்போன் செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.
கிராமங்களில் சொந்தபந்தங்களில் வீட்டு விசேஷத்தில் பங்கெடுக்கும் போது மொய் கொடுப்பது வழக்கம். ஒருவர் பணத்தை வாங்க மற்றொருவர் பெயர், ஊர் ஆகியவற்றை எழுதிக் கொள்வார். நகரத்தில் மொய் கவரில் ஊர் பெயர் விலாசத்தை எழுதி மணமக்களின் கைகளில் கொடுப்பார்கள். தற்போது இதன் அடுத்த வடிவமாக செல்போன் செயலியின் மூலமாக மொய் செய்பவரின் விவரங்களை எழுதிக்கொள்ள செயலியை உருவாக்கியுள்ளனர் உசிலம்பட்டிப் பெண்கள்.
கடந்த காலங்களில் பெண்குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்வதாக அடையாளம் காணப்பட்ட உசிலம்பட்டி பகுதியில் பெண்கள் உருவாக்கியுள்ள இந்த மொய் டெக் எனும் செயலி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. மேலும் விழாக்களுக்கு வந்து மொய் எழுதும் மக்களுக்கு அவர்கள் மொய் செய்தமைக்கான ரசீது மற்றும் அவர்களது அலைப்பேசிக்கு குறுந்தகவல் என அசத்துகின்றனர். இதன் மூலம் ஊரிலுள்ள மற்ற இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றனர். பல கிராமப்புறங்களுக்கு தேவையான செயலியை வடிவமைக்கவும் இவர்களையே மக்கள் அணுகுகின்றனர். இவர்களின் முயற்சி உசிலம்பட்டியை ஒட்டிய கிராமப் பகுதியின் முகத்தை மாற்றும் ஒரு அம்சமாகப் பார்க்கப்படுகிறது.