Chandrayaan-3 - ISRO Twitter
டெக்

சந்திரயான் 3 எடுத்த முதல் நிலா வீடியோ! #Video

எல்.வி.எம் ராக்கெட் சந்திரயான் விண்கலம் கடந்த 14 ஆம் தேதி மூலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டது. நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்ற சந்திரயான் 3 விண்கலம், முதன்முதலாக நிலவின் மேற்பரப்பை படம் பிடித்து அனுப்பியுள்ளது.

PT WEB

சந்திரயான் விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி எல்.வி.எம் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 179 கிலோமீட்டர் உயரத்தில் புவி சுற்றுவட்ட பாதையில் அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலம், 16 நிமிடத்தில் நிலை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மறுநாளான 15 ஆம் தேதி சந்திரயான் விண்கலம், முதல்சுற்று வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது.

இதையடுத்து பூமியை சுற்றி நீள் வட்டப்பாதையில் பயணித்த சந்திரயான் 3 விண்கலம், கடந்த சனிக்கிழமையன்று நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. இந்த தருணத்தில் நிலவின் மேற்பரப்பை படம்பிடித்து அனுப்பியுள்ளது.

இந்திய நேரப்படி ஆகஸ்ட் 5 அன்று சரியாக 7:12 மணிக்கு நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் சந்திரயான் விண்கலம் சென்றதாக இஸ்ரோ தெரிவித்தது. நிலவின் சுற்றுவட்ட பாதையில் குறைந்த தூரமாக 164 கிலோ மீட்டர் என்கிற உயரத்திலும், அதிக தூரமாக 18,074 கிலோ மீட்டர் என்கிற உயரத்திலும் சந்திரன் விண்கலமானது நீள் வட்டப் பாதையை அமைத்து.

இந்த சுற்று வட்ட பாதையில் செல்கையில் விண்கலம் படம்பிடித்த காணொளி காட்சியொன்றை இஸ்ரோ நேற்று வெளியிட்டுள்ளது. அதில் பசுமை கலந்த நீல நிறத்தில் நிலவின் தரைப்பகுதி காட்சியளிக்கிறது. நிலவின் மேற்பரப்பில் விண் கற்களால் ஏற்பட்ட பள்ளத்தாக்குகளும் மேடுகளும் காணொளியில் காணக்கிடைக்கின்றன. சந்திரயான் விண்கலத்தின் மேற்புறத்தில் உள்ள உயர் தொழில்நுட்ப கேமராக்கள் உதவியுடன் நிலவின் மேற்பரப்பானது பதிவு செய்யப்பட்டுள்ளது.

Chandrayaan-3 --ISRO

சந்திரயான் விண்கலத்தின் பயணம் குறித்த அறிக்கைகள் கடந்த 20 நாட்களாக வெளியிடப்பட்ட நிலையில் தற்போது முக்கிய ஆதாரமாக நிலவின் மேற்பரப்பு மற்றும் அதன் புறத்தோற்றம் சந்திரயான் விண்கலத்தின் கேமரா மூலம் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் நேற்று இரவு 10:30 மணியிலிருந்து 11:30 மணிக்குள் சந்திரயான் 3 விண்கலத்தின் நிலவின் சுற்றுவட்ட பாதை குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அடுத்து தொடர்ச்சியாக ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் விண்கலத்தின் உயரம் மற்றும் வேகம் குறைக்கப்படும். நிலவின் ஈர்ப்பு விசையில் பயணிக்கும் விண்கலம் 17ஆம் தேதிக்கு பிறகு இரண்டாகப் பிரிய உள்ளது. நிலவின் ஈர்ப்பு விசையில் சுற்றிவரும் சந்திரயான் விண்கலம் எடுத்துள்ள நிலவின் புகைப்படம், இதுவரை இஸ்ரோவால் வெளியிடப்பட்ட நிலா புகைப்படங்களில் வித்தியாசமானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வரும் 23ஆம் தேதி இரவில் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 -ந.பால வெற்றிவேல்