இந்திய அரசு டிக்டாக் உட்பட சுமார் 59 சீன அப்ளிகேஷனை பயன்படுத்த தடை விதித்தது. இந்நிலையில் டிக்டாக் அப்ளிகேஷனிற்கு மாற்று அப்ளிகேஷனை வடிவமைத்து அசத்தியுள்ளனர் பெங்களூருவின் ஐ.டி நிறுவன ஊழியர்களும், நண்பர்களுமான சுமித் கோஷ் மற்றும் பிஸ்வத்தாமா நாயக்.
மென்பொருள் வடிவமைப்பில் தாங்கள் கற்ற தொழில்நுட்ப ஞானத்தை வைத்து ‘சிங்காரி’ மொபைல் அப்ளிகேஷனை அவர்கள் வடிவமைத்துள்ளனர். “இன்று நம் செல்போன்களில் பயன்படுத்தி வரும் பெரும்பாலான அப்ளிகேஷன்கள் மேல் நாடுகளில் வடிவமைக்கப்பட்டவை. ஏனோ அது எங்களை லேசாக உறுத்தியது. அதன் வெளிப்பாடாக பணி நேரம் போக எங்களது ஓய்வு நேரத்தை எல்லோருக்கும் பயனுள்ள வகையில் நாங்களே ஒரு நட்பு ஊடக செயலியை வடிவமைக்க விரும்பினோம். பலதரப்பட்ட சோதனை முயற்சிகளுக்குப் பிறகு முதன்முதலில் போட்டோக்களை மட்டுமே பகிரும் வகையிலான அப்ளிகேஷனை 2018-இன் இறுதியில் வடிவமைத்தோம்.
தொடர்ச்சியாக நண்பர்களின் ஒத்துழைப்போடு பல்வேறு அம்சங்களை அந்த அப்ளிகேஷனில் சேர்த்தோம். நாங்கள் வடிவமைத்த அப்ளிகேஷனை பயன்படுத்தும் பயனர்களை திருப்தி படுத்துவது தான் எங்கள் இலக்கு. அதற்காக வெறும் பொழுதுபோக்கு தளமாக மட்டும் இல்லாமல் பலவிதமான தகவல்களை சொல்லுகின்ற அப்ளிகேஷனாக இருக்க வேண்டும் என விரும்பி சிங்காரியை வடிவமைத்துள்ளோம்” என்கிறார் இதன் வடிவமைப்பாளர்களில் ஒருவரான அமித் கோஷ்.
இதில் வீடியோக்கள் மட்டும் இல்லாமல் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் செய்திகளையும், பொழுதை இனிதாக செலவிட ஆன்லைன் கேம்களையும் இணைத்துள்ளார்கள். சர்வ வல்லமையும் கொண்ட சூப்பர் ஹீரோ போல சிங்காரி ஒரு சூப்பர் அப்ளிகேஷன். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி சில நொடிகள் மட்டுமே ஓடுகின்ற ஷார்ட் வீடியோக்களை உருவாக்கலாம்.
அதோடு நண்பர்களுடன் சேட்டிங் செய்வதற்கான மெசஞ்சர், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை பார்ப்பதற்கான வசதி, பயனர்கள் இணையத்தில் தங்களுக்கு வேண்டியவற்றை தேடி பார்க்க உதவும் தேடு பொறியாகவும் பயன்படுத்தலாம். இதில் உருவாக்கி அப்லோட் செய்யப்படும் வீடியோக்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து வெகுமதி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட இந்தியாவின் பல்வேறு பிராந்திய மொழிகளில் சிங்காரியை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களில் இந்த செயலி இயங்கும்.