முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான Airtel நிறுவனம், தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 3 பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களில் நன்மை கிடைக்கும் வகையில் விபத்து காப்பீட்டை அறிமுகப்படுத்துகிறது. இதற்காக ஏர்டெல் நிறுவனம் ஐசிஐசிஐ லோம்பார்ட் (ICICI Lombard) உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
விபத்து காப்பீடு கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள் என்ன, அதன்மூலம் எவ்வளவு தொகை கிடைக்கும், என்னென்ன விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
Telecomtalk-ன் சமீபத்திய அறிக்கையின்படி, ஏர்டெல்லின் ரூ.239, ரூ.399 மற்றும் ரூ.969 ஆகிய 3 திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் விபத்து காப்பீட்டை பெறுவார்கள்.
இந்த 3 திட்டங்களையும் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள், காப்பீட்டு நிறுவனமான ஐசிஐசிஐ லோம்பார்டுடன் தங்கள் ப்ரொபைல் விவரங்கள் (Profile Details) மற்றும் தனிப்பட்ட தகவல்களை (Personal Details) பகிர்ந்து கொள்ள ஏர்டெல்லை அங்கீகரிப்பார்கள். இதன்மூலம் அவர்களுக்கான இன்சூரன்ஸை உறுதி செய்யப்படும். காப்பீட்டின் படி இறப்பிற்கான தொகையாக ஒரு லட்சமும், விபத்தில் காயம்பட்டால் 25,000 தொகையும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ரீசார்ஜ் திட்டம் ரூ. 239-ஐ பொறுத்தவரையில், அன்லிமிடட் வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்/ நாள் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் இணைக்கப்பட்டுள்ள விபத்துக் காப்பீட்டின் படி வாடிக்கையாளர்களுக்கு மரணமோ அல்லது விபத்தில் ஊனமோ ஏற்பட்டால் ரூ. 1 லட்சமும், விபத்து காரணமாக 30 நாட்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ.25,000-மும் வழங்குகிறது.
ரீசார்ஜ் திட்டம் ரூ. 399-ஐ பொறுத்தவரையில், டெய்லி 2ஜிபி டேட்டாவுடன் திட்டம் ரூ.239-ல் கிடைக்கும் அனைத்தும் கிடைக்கிறது.
ரீசார்ஜ் திட்டம் ரூ. 969-ஐ பொறுத்தவரையில், டெய்லி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடட் வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ்/ நாள் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் இணைக்கப்பட்டுள்ள விபத்துக் காப்பீட்டின் படி வாடிக்கையாளர்களுக்கு மரணமோ அல்லது விபத்தில் ஊனமோ ஏற்பட்டால் ரூ. 1 லட்சமும், விபத்து காரணமாக 30 நாட்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ.25,000-மும் வழங்குகிறது.
விபத்து காப்பீடு இணைக்கப்பட்டுள்ள 3 திட்டங்களின் விதிமுறைகளின் படி, விபத்து பாலிசியானது 18 - 80 வயதுக்குட்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர் ஒரு பாலிசிக்கு ஒருமுறை மட்டுமே (1 claim per policy per event) க்ளெய்ம் செய்துகொள்ள முடியும்.
ஒருவேளை உங்களிடம் பல ஏர்டெல் ப்ரீபெய்ட் சிம்கள் (Airtel Prepaid SIM Cards) இருந்தால், அதிகபட்சமாக ரூ.5,00,000 வரை காப்பீட்டை பெறலாம். ஏர்டெல்லின் ரூ.239, ரூ.399 மற்றும் ரூ.969 ஆகிய 3 திட்டங்களின் கீழும் கிடைக்கும் இந்த பாலிசியானது, இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்த மறுநாள், அதாவது ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளின் நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.