ஏர்செல் சேவை முடங்கியதை அடுத்து அதிலிருந்து வெளியேறியவர்களில் ஏர்டெல், வோடோபோன் கம்பெனிகளுக்கு அதிகம் மாறினர்.
ஏர்செல் சேவை முற்றிலும் முடங்கியதால் அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர். இதனையடுத்து ஏர்செல் நிறுவனமே வாடிக்கையாளர்களை வேறு நெட்வொர்கிற்கு மாறி கொள்ளும்படி அறிவுரை வழங்கியது. வாடிக்கையாளர்கள் தங்களது நம்பரை மாற்றாமல் வேறு நெட்வொர்க்கிற்கு மாறிக்கொள்ளும் போர்டபிளிட்டி வசதியும் இருந்ததால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பலரும் தங்களது விரும்பிய நெட்வொர்கிற்கு மாறினர். மேலும் மாறியும் வருகின்றனர்.
ஏர்செல் நிறுவனத்தில் நாடு முழுவதும் 1.5 கோடி வாடிக்கையாளர்கள் இருந்தனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடிக்கும் மேல் இருக்கும். தென் தமிழகத்தில் ஏர்செல் மிகவும் வலிமையாக இருந்தது. ஒரே வீட்டில் இரண்டுக்கு மேற்பட்டோர் ஏர்செல் சிம் வைத்திருக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் அந்நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. தீடிரென ஏர்செல் நிறுவனம் முடங்கும் நிலை வந்ததால், அதன் வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் ஏர்டெல், வோடோபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்கள் ஈடுபட்டன.
இதில், ஏர்செல் வாடிக்கையாளர்களை கவர்வதில் ஏர்டெல் மற்றும் வோடோபோன் இடையே கடும் போட்டி நிலவியது. ஏர்செல் அலுவலங்கள் முன்பு பல நாட்கள் ஸ்டால்கள் அமைத்து, அங்கு பிரச்னையுடன் வரும் வாடிக்கையாளர்களை உடனடியாக தங்களது நிறுவனத்திற்கு மாற்றினர். இந்தப் போட்டியில், இதுவரை ஏர்டெல் நிறுவனம்தான் முன்னிலையில் உள்ளது. ஏர்செல் வாடிக்கையாளர்களில் சுமார் 15 லட்சம் பேர் ஏர்டெல் நிறுவனத்திற்கு மாறியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, வோடோபோன் நிறுவனத்திற்கு 10 லட்சம் பேர் மாறியுள்ளனர்.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை பொறுத்தவரை இதுவரை 3.3 லட்சம் பேர் அந்நிறுவனத்திற்கு ஏர்செல்லில் இருந்து மாறியுள்ளதாகவும், 3.7 லட்சம் பேர் மேலும் மாற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், பி.எஸ்.என்.எல் செய்தி தொடர்பாளர் விஜயா கூறியுள்ளார். இதுவரை ஏர்செல்லில் இருந்து மாறியவர்களில் 50 சதவீதம் பேர் ஏர்டெல்லுதான் மாறியுள்ளனர்.