கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ரோபோ pt web
டெக்

1,500 மணி நேர உழைப்பில் உருவான AI ரோபோ... கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் அசத்தல்!

1,500 மணி நேர உழைப்பில் உருவாகியுள்ள இந்த ரோபோ 6 அடி உயரம், 48 கிலோ எடை கொண்டது. 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது..

PT WEB

கோவையில் தனியார் கல்லூரி மாணவர்கள், மனிதர்களைப் போன்ற செயல்பாடுகளை கொண்ட ஏஐ ரோபோ ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு மூலம் மனிதர்களுடன் உரையாட முடியும் என்பதால், ரோபோ மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இன்று உலக அளவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் பலரும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் விஞ்ஞானம் மற்றும் மனித வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் இந்த தொழில்நுட்பம் பெரும் பங்காற்றி வருகிறது. அந்த வகையில் கோவை சூலூர் அருகே உள்ள தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் இணைந்து மனிதனைப் போன்ற செயல்பாடுகளை கொண்ட செயற்கை நுண்ணறிவு ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

1,500 மணி நேர உழைப்பில் உருவாகியுள்ள இந்த ரோபோ 6 அடி உயரம், 48 கிலோ எடை கொண்டது என்றும், 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

மனிதர்களைப் போலவே பல்வேறு செயல்களை செய்யும் திறன் கொண்ட இந்த ரோபோ, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனிதர்களுடன் உரையாடவும் செய்யும் என தெரிவிக்கின்றனர்.

மேலும் ரோபோவுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தும் போது அதன் செயல்பாடுகள் இன்னும் சிறப்பாக இருக்கும் என பேராசிரியர்கள் தெரிவித்தனர். கல்லூரி, மருத்துவமனை, வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் இந்த ரோபோவை பயன்படுத்த முடியும் என்றும், இன்னும் இதற்கு கூடுதல் தொழிநுட்பங்களை பயன்படுத்தி அடுத்த செயல் வடிவத்திற்கு எடுத்து செல்லவுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.