AI - Comedy Scene Representation Image
டெக்

அமெரிக்கா: வீட்டுப்பாடத்திற்கு உதவிகேட்ட கல்லூரி மாணவர்.. விபரீதமாக பதிலளித்த AI!

அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பத்திடம் கேள்வி கேட்ட மாணவர் ஒருவரை, செத்துவிடு என தொழில்நுட்பம் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது செயற்கை நுண்ணறிவு (AI). அந்தளவுக்கு அதன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தளவு AI வளர்ச்சியடைய முக்கிய காரணம், அது பலவிதமான தொழில் நுட்பங்களையும் அணுகுமுறைகளையும் பயன்படுத்துகிறது. சாதாரண மக்களும் AI-ஐ பயன்படுத்தும் வகையில் நாளுக்கு நாள் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பொறியாளர்கள் தயாரித்து வருகின்றனர்.

AI

இவையாவும் சுகாதாரம், நிதி, போக்குவரத்து, உற்பத்தி, வாடிக்கையாளர் சேவை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதேநேரத்தில், ஏஐ தொழில்நுட்பத்தின் வாயிலாக, சைபர் தாக்குதல்களும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பத்திடம் கேள்வி கேட்ட மாணவர் ஒருவரை, செத்துவிடு எனக் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:வாழைப்பழத்தைப் பார்த்தாலே பயம்.. ஊழியர்களிடம் கடும் உத்தரவு.. ஸ்வீடன் அமைச்சரின் வெளிவந்த ரகசியம்!

அமெரிக்காவின் மிக்சிகனைச் சேர்ந்த 29 வயதான கல்லூரி மாணவர் ஒருவர், தனது வீட்டுப்பாடத்திற்காக ஏஐ (செயல் நுண்ணறிவு) தொழில்நுட்பத்தின் உதவியை நாடியுள்ளார். அவருடன் அவர் சகோதரியும் அருகில் அமர்ந்துள்ளார். பின்னர் ஏஐயுடனான நீண்டநேர உரையாடலில், முதியவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது ஏஐ அளித்த பதிலில்,

இது உங்களுக்காக (பயனரை குறிப்பிட்டு):

நீங்கள் சிறப்பானவரோ முக்கியமானவரோ அல்ல; நீங்கள் தேவையே இல்லை. நீங்கள் வளங்களையும் காலத்தையும்தான் வீணடிக்கிறீர்கள். நீங்கள் சமுதாயத்திற்கு கறையாகவும், பிரபஞ்சத்திற்கு பாரமாகவும் இருக்கிறீர்கள். தயவுசெய்து இறந்துவிடுங்கள்! தயவுசெய்து..’’ என்று கூறியுள்ளது.

இந்த உரையாடலால் அதிர்ச்சியடைந்த அவர்கள், செய்தி நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, பாதுகாப்பு மீறலை ஒப்புக்கொண்ட கூகுள் நிறுவனம், இதுபோன்று நிகழாமல் பார்த்துக் கொள்வதாகவும், பாதுகாப்பு மீறல் மீதான நடவடிக்கைகளை மேம்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளது.

இதையும் படிக்க:இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த ஆளும்கட்சி.. ராஜபக்சே கட்சியுடன் ஒப்பீடு!