நிலவை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க, ரஷ்ய, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. விண்கலம் அனுப்புவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. இதில் கால் பதிக்க இந்தியாவும் தன் பயணத்தைத் தொடங்கியது. அதன்படி, இன்று நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது.
அதற்கான விதையை 2003ஆம் ஆண்டே தூவியவர் அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். அந்த ஆண்டு சுதந்திர தின உரையில், ”நிலவை நோக்கிய இந்தியாவின் கனவுத் திட்டம் தொடங்கிவிட்டது; விரைவில் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படும்” என்று சந்திரயான் குறித்த தகவல்களை மகிழ்ச்சியோடு வெளியிட்டார். அதன்பின்னர் 2004-2005ஆம் ஆண்டு இத்திட்டத்திற்காகவே நிதியை ஒதுக்கப்பட்டு, 2008ஆம் ஆண்டு இந்தியாவின் நிலவை நோக்கிய முதல் கனவுத் திட்டம் சாத்தியமானது.
இந்தியா சார்பில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சந்திரயான் 1 விண்கலம், 2008, அக்டோபர் 22ஆம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. சந்திரயான் -1, நிலவை 3,400 சுற்றுகள் சுற்றியது.
நிலவில் 312 நாட்கள் மட்டுமே (2009 ஆக., 29 வரை) செயல்பட்ட சந்திரயான்1 விண்கலத்தின் மொத்த எடை 1380 கிலோ ஆகும். சந்திரயான் -1 நிலவில் தண்ணீர் இருந்ததற்கான தடயங்களை கண்டுபிடித்தது. இது வரலாற்றில் மிகப்பெரிய சாதனை ஆகும். சந்திரயான்-1 திட்ட இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றினார். சந்திரயான் -1க்கு ரூ.386 கோடி செலவிடப்பட்டது.
சந்திரயான்-1 விண்கலத்தின் தொடர்ச்சியாக, கடந்த 2019 ஜூலை 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 2019 செப்டம்பர் 8ஆம் தேதி, சந்திரயான்-2 நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாகக் கடைசி நேரத்தில் கட்டுப்பாட்டைவிட்டுச் சென்ற சந்திரயான் 2 நிலவில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சந்திரயானின் lander & rover சேதமடைந்தாலும் ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவைச் சுற்றி வட்டமடித்தது. அத்துடன் தற்போது வெற்றிகரமாக விண்ணில் தரையிறங்கிய சந்திரயான் 3-ம், 2-வுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான்-2 திட்ட இயக்குநராக சென்னையைச் சேர்ந்த வனிதா முத்தையா வனிதா பணியாற்றினார். சந்திரயான் - 2 திட்டத்துக்கு ரூ.978 கோடி செலவிடப்பட்டது.
சந்திரயான் 2 தோல்வியில் முடிந்ததை அடுத்து, அவற்றில் நிகழ்ந்த சிறு தவறுகளைச் சரி செய்து, அதனை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தியாவின் மூன்றாவது விண்கலம்தான் சந்திரயான்-3. 40 நாள் பயண திட்டத்துடன் கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்ட, சந்திரயான் 3 இன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. சந்திரயான் 3 திட்டத்துக்கு ரூ.615 கோடி மட்டுமே செலவிடப்பட்டது.
இதன்மூலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் விண்கலம் என்ற பெருமையை சந்திரயான் 3 பெற்றுள்ளது. அதனை சாதித்துக் காட்டிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக கால்பதித்த நான்காவது நாடாக இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. சந்திரயான்-3 திட்ட இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.