டெக்

'டார்க் மோட்' உள்ளிட்ட வசதிகளுடன் வடிவத்தை மாற்றவுள்ள பேஸ்புக்!

'டார்க் மோட்' உள்ளிட்ட வசதிகளுடன் வடிவத்தை மாற்றவுள்ள பேஸ்புக்!

webteam

'டார்க் மோட்' வசதி உள்ளிட்ட பல மாறுதல்களுடன் பேஸ்புக் தனது வடிவத்தை மாற்றவுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளம் பேஸ்புக். பயனாளர்கள் அதிகாலை கண் விழிப்பதும் இரவு கடைசியாக பார்த்துவிட்டு தூங்குவதும் பேஸ்புக்கைத்தான் என்ற நிலைமைதான் தற்போது. பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி வியபாரம், தேர்தல் பிரசாரம் என வணிக ரீதியிலாகவும் பேஸ்புக் இயங்கி வருகிறது. 

2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட பேஸ்புக், 2008க்கு பிறகு விஸ்வரூபம் எடுத்தது. பயனாளர்களின் மனநிலைக்கு ஏற்பவும், பயன்படுத்த எளிதாகவும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் மூலம் பேஸ்புக் புதுப்பொலிவுடனே இருந்து வருகிறது. பல அப்டேட்டுகள் வந்தாலும் பேஸ்புக் தனது வடிவத்தில் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வரவில்லை. தற்போது வடிவத்தில் மாற்றம் கொண்டு வர பேஸ்புக் தீர்மானித்துள்ளது.

 "FB5" வெர்ஷன் என்ற பெயரில் பேஸ்புக் புதிய வடிவம் பெறவுள்ளது. இந்த புதிய அப்டேட்டுகள் பயன்படுத்த எளிமையாவும், விரைவாகவும்,  அதிவேகமானதாகவும் இருக்குமென்றும், இது பல்வேறு பயன்பாட்டு அம்சங்களை கொண்டது என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தெரிவித்துள்ள  பேஸ்புக், ''பேஸ்புக் ஸ்டோரிஸ் போன்ற ஒரு சில அப்டேட்டுகள் இப்பொழுதே பலருக்கும் கிடைக்கும்.

கணினிக்கான புதிய வடிவம் அடுத்த சில மாதங்களில் கிடைக்கப்பெறும். அனைவரும் எதிர்பார்க்கும் 'டார்க் மோட்' வசதியும் இந்த அப்டேட்டில் கிடைக்கும். கணினியில் பயன்படுத்தும் பேஸ்புக்குக்கு 'டார்க் மோட்' வசதி முழுவதுமாக கிடைக்குமென்றும், போனில் பயன்படுத்தும் பேஸ்புக்குக்கு முதலில் வீடியோவுக்கு மட்டும் 'டார்க் மோட்' வசதி கொடுக்கப்பட்டு பின்னர் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கின் புதிய வடிவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பலரும் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.  டார்க் மோட் வசதிக்காக காத்திருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.