அசாம் மாநிலம் திப்ருகாரைச் சேர்ந்த பிஷல் புகான், பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து 60 நாட்களில் 30 சதவிகிதம் வருவாய் ஈட்டித் தருவதாகக்கூறி பொதுமக்களிடம் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பணத்தைக் கொண்டு மருந்து, உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறைகளில் 4 நிறுவனங்களை தொடங்கியதாக கூறப்படுகிறது.
அசாமில் திரைப்படத்துறையிலும் முதலீடு செய்து பல சொத்துகளை வாங்கியதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்த நிலையில், காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். அதேநேரம், தனது முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தந்ததாகவும், அவர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதாகவும் பிஷல் முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அவரது வீட்டில் சோதனை செய்த காவல்துறையினர், மோசடி தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிவித்தனர். மேலும், பிஷல் மற்றும் அவரது மேலாளரையும் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில், புகார்கள் குறித்து விரிவாக விசாரிக்க அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மோசடியான வார்த்தைகளைக் கூறி முதலீடு செய்யச் சொல்வோரை நம்பவேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.