chandrayaan 3 pt web
டெக்

"லேண்டரில் இருந்து தரையிறங்கிய ரோவர் 8மீ பயணித்துள்ளது” - அடுத்தடுத்த காணொளிகளை வெளியிடும் இஸ்ரோ!

லேண்டரில் இருந்து தரையிறங்கிய பிரக்யான் ரோவர் 8 மீட்டர் பயணித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Angeshwar G

நிலவின் தென் துருவப்பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கம் செய்யப்பட்டு 48 மணி நேரங்களைக் கடந்துள்ள நிலையில், அதன் செயல்பாடுகளும் சிறப்பாக இருப்பதாக இஸ்ரோ அவ்வப்போது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறது.

அந்தவகையில் நிலவில் தரையிறங்கிய சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவரில் உள்ள இரண்டு அறிவியல் ஆய்வு கருவிகளும் செயல்பட தொடங்கியுள்ளன என்றும் லாண்டரில் இருந்து ரோவர் எட்டு மீட்டர் தூரம் பயணித்துள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் 3 திட்டத்தின் லேண்டர், ரோவர், உந்து விசை அமைப்பு போன்றவற்றில் உள்ள அனைத்து அறிவியல் ஆய்வு கருவிகளும் செயல்படத் தொடங்கியுள்ளன என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உந்துவிசைக்கலன் தனித்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சந்திரயான் விண்கலத்தில் இருந்து வெளியேறிய ரோவர் சாதனத்தில் பொருத்தப்பட்டு இருந்த தகடு சூரியனை நோக்கித் திரும்பு வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு இருந்தது. தற்போது லேண்டரில் இருந்து ரோவர் 8 மீட்டர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.