Gpay மோசடி PT
டெக்

சென்னை | மதுபான பாரில் GPAY மூலம் மோசடி.. வடமாநில ஊழியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு! என்ன நடந்தது?

PT WEB

திருவொற்றியூரை சேர்ந்த கவி கணேசன் என்பவர், கோயம்பேட்டில் மதுபான பார் ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு வடமாநிலத்தை சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பாரில் வருமானம் குறைவாக வந்ததால், பாரின் மேலாளர் தணிக்கையில் ஈடுபட்டுள்ளார்

அப்போது, வடமாநிலத்தை சேர்ந்த மூன்று ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து அவர்களை கையும் களவுமாக பிடித்து, பார் நிர்வாகிகள் அடைத்து வைத்து விசாரித்ததாக கூறப்படுகிறது.

5 லட்சம் வரை மோசடி..

பாரில் மது அருந்திவிட்டு வாடிக்கையாளர்கள் ஜிபே மூலமாக பணம் செலுத்தும்போது, மூன்று ஊழியர்களும் நிர்வாகத்தின் க்யூஆர் ஸ்கேனரை காட்டாமல் தங்களின் ஜிபே எண்ணிற்கு பணத்தை பெற்று 5 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து பெண் சமூக ஆர்வலர்கள் கொடுத்த தகவலின் பேரில், காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பார் மேலாளர் அளித்த புகாரின்பேரில், மூன்று ஊழியர்கள் மீது மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதேபோல், தங்களை அடைத்து வைத்து தாக்கியதாக ஊழியர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், பார் நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.