தங்களுக்கு வாட்ஸ் அப்பில் வந்த மர்ம அழைப்புகள் குறித்து வழக்கறிஞர்கள் சிலர் பேசியுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை குறி வைத்து, அவர்களின் வாட்ஸ் அப் மூலம் உளவுப்பார்க்கப்பட்ட தகவல் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1,400 மொபைல் போன்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், ‘பெகசஸ்’ என்ற மால்வேர் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் தகவல் திருடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளிக்கவேண்டுமென்றும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1400 பேர் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்பட்டாலும் தனிப்பட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் தனக்கு சில மர்மமான வீடியோ அழைப்புகள் வந்ததாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தான் வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு அப்போதே புகார் அளித்ததாகவும் ஆனால் அவர்கள் புகாரை கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் மனித நிகல் சிங் ரத்தோட். மனித உரிமை வழக்குகள் தொடர்பாக வாதாடும் இவர் வாட்ஸ் அப் உளவு குறித்து பேசியுள்ளார். அதில் “எனக்கு ஒரு எண்ணில் இருந்து வீடியோ அழைப்பு வந்தது. +31 மற்றும் +45 என்று தொடங்கும் வெளிநாட்டு எண்ணில் இருந்தே அழைப்புகள் வந்தன. எனக்கு ஏதோ பிரச்னை என்று தோன்றியது. அதனால் நான் அந்த அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
அதேபோல் வழக்கறிஞர் ஜெகதீஷ் மெஷ்ராம் என்பவரும் வாட்ஸ் அப் உளவு குறித்து பேசியுள்ளார். எனக்கும் மர்மமான அழைப்புகள் வந்தது. இது குறித்து உடனடியாக மார்ச் மாதமே வாட்ஸ் அப்புக்கு புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் ஏதும் பதில் அளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். இன்னும் சில வழக்கறிஞர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் மர்ம அழைப்புகள் குறித்து பேசியுள்ளதாக தி குயிண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.