விக்டர் கோப்புப் படம்
தமிழ்நாடு

குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தஞ்சை இளைஞர்... காட்டிக் கொடுத்த கூகுள் நிறுவனம் !

குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞரை கூகுள் மற்றும் டேட்டிங் செயலி இணைந்து கண்டுபிடித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சண்முகப் பிரியா . செ

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான விக்டர் ஜேம்ஸ் ராஜா. எம்.காம் பட்டதாரியான இவர் பிஹெச்டி படித்து வந்துள்ளார். அப்போது அவரது அழைபேசிக்கு கூகுளிடம் இருந்து, “இந்தக் கணக்கில் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் அல்லது சுரண்டல் போன்ற உள்ளடக்கம் இருப்பதுபோல் தெரிகிறது. இது கூகுளின் கொள்கைகளை கடுமையாக மீறுவதாகும். மேலும் இது சட்டவிரோதமாகவும் இருக்கலாம். உங்கள் கணக்கு தவறுதலாக முடக்கப்பட்டதாக நீங்கள் நினைத்தால், கூடிய விரைவில் மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்கவும்,” என்று ஒரு பாப்-அப் செய்தி வந்துள்ளது.

விக்டர்

உடனே விக்டர் தனது டிஜிட்டல் டிராக்குகளை மறைக்கும் முயற்சியில் தனது தொலைபேசியை வடிவமைத்துள்ளார். இனி, தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை எனப் பெருமூச்சுவிட்ட விக்டர், அதே கூகுள்தான் தனது ரகசியக் குற்றங்களை அம்பலப்படுத்தப் போகிறது என அப்போது நினைத்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் அவருக்குத் தெரியாமல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக செயல்படும் ஒரு நிறுவனத்திற்கும் கூகுள் எச்சரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதேபோல டேட்டிங் பயன்பாட்டை இயக்கும் மற்றொரு நிறுவனமான Grindr என்னும் நிறுவனத்திற்கும் இந்த எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது.

அடுத்த இரண்டே மாதங்களில் அதாவது மார்ச் 2023-ன் தொடக்கத்தில், சிபிஐயின் சிறப்புக் குற்றப் பிரிவில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி விகாஸ் குமாருக்கு ஐசிஎஸ்இ-யில் இருந்து ஒரு எச்சரிக்கைக் குறிப்பு அனுப்பப்படுகிறது.

INTERPOL-ன் அந்தக் குறிப்பில் 36 வயதான விக்டரைப் பற்றியும், அவர் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவற்றை CSAM தயாரித்து பரிமாறிக் கொள்வதில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது . இதனால் துணுக்குற்ற விகாஸ் உடனடியாக களத்தில் இறங்கியுள்ளார். விக்டர் ஜேம்ஸ் ராஜா மீது சிபிஐ அதிகாரிகள் கடந்த 2023, மார்ச் 7-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து 16-ஆம் தேதி கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த சமயத்தில் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில், விக்டர் ஜேம்ஸ் ராஜா 18 வயதுக்குட்பட்ட சிறுவர் - சிறுமிகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததும், அதை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து இணையதளத்தில் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கபட்டது. அவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் நான்கு பேர் 10 வயதிற்கு உட்பட்டவர்கள். இவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அனைவரும் 5 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள்.

விக்டர், வீடியோக்களை 2021 முதல் 2023 வரை பதிவு செய்து விற்பனை செய்துள்ளார். சிறுவர் சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாது அவர்களையும் மிரட்டி ஒருவரை ஒருவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட வைத்து அவற்றையும் வீடியோ பதிவு செய்து விற்பனை செய்துள்ளார்.

இது குறித்து தெரிவித்த விக்டர், தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும் தான் "பாஜக எதிர்ப்பு ஆளும்" மாநிலத்தில் இருந்து வருவதாலும் சமூக ஊடக தளங்களில் மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை விமர்சித்ததாகவும், அது குறித்த மின்னஞ்சல்களை அவர் மத்திய அமைச்சர்களுக்கு அனுப்பியதாகவும், அதனால்தான் சிபிஐயால் பொய் வழக்கில் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டினார்.

விக்டர்

மேலும் மத்திய புலனாய்வு அமைப்புகளால், தான் கண்காணிக்கப்பட்டடு மின்னஞ்சல் மற்றும் மொபைல் போன்கள் ஹேக்" செய்யப்பட்டு CSAM பொருட்களைப் பொருத்தி குற்ற வலையில் வீழ்த்தியுள்ளனர் என்றும் கூறினார். அதுமட்டுமல்லாது தனது மதப் பின்னணி காரணமாகத்தான் குறிவைக்கப்பட்டதாகவும், விறைப்புத் திறனின்மையால் அவர் குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.

இருப்பினும், சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ் சசிரேகா, விக்டருக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்தார், இது கூகுளாலும் உறுதிப்படுத்தப்பட்டது. எனவே சுமார் ஒரு வருடம் நடந்த விசாரணைக்குப் பிறகு, விக்டருக்கு ஜூலை 9, 2024 அன்று தஞ்சாவூரில் உள்ள சிறப்பு POCSO நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் 6.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலா 4 லட்சம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தது.

ICSE?

ICSE என்பது நுண்ணறிவு மற்றும் புலனாய்வுக் கருவியாகும், இது சிறப்பு புலனாய்வாளர்களை, குழந்தை பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பற்றிய தரவைப் பகிர அனுமதிக்கிறது, இதைப் பயன்படுத்தி புலனாய்வாளர்கள் பாதிக்கப்பட்டவர்கள், துஷ்பிரயோகம் செய்பவர்கள் மற்றும் CSAM உருவாக்கப்பட்ட அல்லது பகிரப்படும் இடங்களை உடனடியாகக் கண்டறிய முடியும். 67 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏஜென்சிகளின் ஒரு பகுதியாக சிபிஐ 2022-ல் ICSE இல் சேர்ந்தது.