பங்குனி பெருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உலகப் புகழ்பெற்ற அறுபத்துமூவர் நாயன்மார்கள் வீதி உலா இன்று கோலாகலாமாக நடக்கிறது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர்.
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள பழமையான கபாலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலமாகும். இங்கு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரராக மூலவர் அருள் பாலிக்கிறார்.
கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி பெருவிழா கடந்த 28ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. 93 அடி உயரம் 300 டன் எடை கொண்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில் கபாலீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதைத் தொடர்ந்து 8 ஆம் நாள் நிகழ்வாக இன்று உலக புகழ்பெற்ற அறுபத்துமூவர் வீதி உலா நடைபெற்றது. கோயிலை சுற்றி மாட வீதிகளை அறுபத்துமூவர் நாயன்மார்கள் உலா வரும் நிகழ்வு பக்தர்கள் புடை சூழ நடைபெற்றது.
இந்த அறுபத்துமூவர் விழாவை காண தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தனர். கோயிலை சுற்றிலும் உள்ள கோயில், மாட வீதிகள் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்று இருந்ததால் காவல்துறை சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. 1000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அறுபத்துமூவர் விழாவையொட்டி மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அறுபத்துமூவர் வீதி உலாவையொட்டி பலரும் தங்களது வேண்டுதலுக்காக மயிலாப்பூர் முழுவதும் மோர், பானகம், அன்னதானம் உள்ளிட்டவை வழங்கினர்.
மேளதாள வாத்தியங்கள் முழங்கவும், பக்தர்களின் நமச்சிவாய கோஷங்கள் முழங்கவும் 63 நாயன்மார்கள் மாடவீதிகளில் உலா வந்தனர். இதனிடையே,
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருவீதி உலா வந்த பகுதியில் சிக்கிக்கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் விரைவாக வழியை ஏற்படுத்திக் கொடுத்தனர்.