அதிகாரம் மிக வலிமையானது, அதனை அடைந்துவிட்டால், அனைத்தும் எளிமையானது என்ற அண்ணல் அம்பேத்கர் கூற்றுப்படி, 400 ஆண்டு கால தடைகளை தகர்த்து, எட்டு தலைமுறைகளாக சாலையே கண்டிராத, கொடைக்கானல் வெள்ளக்கெவி கிராமத்திற்கு, சாலை அமைத்து கொடுத்திருக்கிறார் கோட்டாட்சியர் முருகேசன்.
சோலைக்கொடிகளாக இருந்த கானகத்தில், 1845ல் முதன்முதலாக வீடுகள் அமைத்து, கொடைக்கானல் என்ற மலைநகரம் உருவாகவித்திட்டவர் லெப்டினன்ட் பி.எஸ். வார்டு. அதற்கு முன்னர் பல ஆங்கிலேய அதிகாரிகள் கொடைக்கானலுக்கு வர முயன்றபோது அவர்களை பல்லக்கில் அமர வைத்து சுமந்து வந்தவர்கள் வெள்ளக்கெவி கிராம மக்கள். ஆனால், 8 தலைமுறைகளாக இந்த மக்கள் காணாத சாலை வசதி இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது சாத்தியமாகியிருக்கிறது. சாலைவசதி கோரி நீண்டகாலமாக மனுக்கள் கொடுத்த மக்கள், 2021 ல் கோட்டாட்சியராக பணியில் இணைந்த முருகேசனை சந்தித்து மனு கொடுத்தனர்.
உடனடியாக களத்தில் இறங்கிய முருகேசன், சாலை அமைக்கும் பணிகளில் இறங்கினார். சாலைக்கு நிலம் தராமல் எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், வனத்துறை நிலம் என்று குழப்பம் வந்த நேரத்தில் நிலஅளவை செய்தும், சாலை அமைப்பதில் இருந்த பல தடைகளை அகற்றி, சுதந்திர தினத்தன்று சாலைப்பணிகள் முழுமை பெற்றன. சுமை சுமந்து நடந்தே நொந்து போன மக்களுக்கு, இந்த சாலை அளித்த மகிழ்ச்சி மிகப்பெரிது.
கோட்டாட்சியர் அமைத்துத்தந்த சாலையில், தாரைத்தப்பட்டையுடன் அழைத்துவந்து ஆரத்தி எடுத்து, பரிவட்டம் கட்டி கொண்டாடித் தீர்த்தனர் மக்கள். இந்த நேரத்தில்தான் முருகேசனுக்கு பணியிடமாறுதல் வந்தது. இதனால் சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள், கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு சென்று அவரை ஆனந்த கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்.
இத்தனை ஆண்டுகளாக காணாத சாலையை அமைத்து கொடுத்த கோட்டாட்சியரின் பணியை அடுத்துவரும் அதிகாரி, தார்சாலையாக மாற்றித்தருவாரா என்பது வெள்ளக்கெவி மக்களின்கேள்வியாக உள்ளது.