தமிழ்நாடு

அவதூறு வழக்கில் கைதான யூடியூபர் மாரிதாஸுக்கு டிசம்பர் 23 வரை சிறை

அவதூறு வழக்கில் கைதான யூடியூபர் மாரிதாஸுக்கு டிசம்பர் 23 வரை சிறை

webteam

சமூகவலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பதிவிட்ட காரணத்துக்காக யூடியூபர்  மாரிதாஸ் என்பவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்தார். அவரை காவல்துறையினர் உத்தமபாளையம் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

யூடியூபரான மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பதிவிட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து மாரிதாஸ் மீது ‘பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்திய’ காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாநகர திமுக தகவல்தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் சைபர்கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரின் கீழ் மதுரை புதூர் அடுத்த சூர்யாநகர் பகுதியில் உள்ள மாரிதாஸின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துவந்தனர். பின்னர், மாநிலத்தின் பொது அமைதியை சீர்குலைத்தல் தொடர்பான 4 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பின்னர் கைது செய்தனர்.

இதனையடுத்து மாரிதாஸை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கு முன்னர் அவருக்கு கொரோனா மற்றும் மருத்துவ பரிசோதனை செய்ய, அவரை காவல்துறையினர் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது புதூர் காவல்நிலையம் முன்பாக காவல்துறையினர் வாகனத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கொரோனா மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு காவல்துறையினர் அழைத்துச்சென்றனர். பின்னர் மாரிதாஸ் மதுரை மாவட்ட 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அங்கு இது தொடர்பாக விசாரித்த நீதிபதி சுந்தர காமேஸ்வர மார்த்தாண்டம், யூடியூபர் மாரிதாஸை வருகின்ற 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட உத்தரவிட்டார் . இதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாரிதாஸ் காவல்துறை வாகனத்தில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் கிளை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.