பிரியாணி மேன் அபிஷேக் கைது x
தமிழ்நாடு

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ.. யூடியூபர் ‘பிரியாணி மேன்’ அபிஷேக் அதிரடி கைது..!

பிரபல யூடியூபர் ’பிரியாணி மேன்’ என்கிற அபிஷேக் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Rishan Vengai

யூட்யூபர் இர்ஃபானுக்கும், ‘பிரியாணி மேன்’ அபிஷேக் ரபிக்கும் கடந்த சில வாரங்களாகவே கருத்து மோதல்கள் இருந்துவந்தன. இதில் அபிஷேக் ரபி, அநாகரீகமான முறையில் பல வார்த்தைகளை பயன்படுத்தி வந்தார். அதற்கு கடும் எதிர்வினைகள் வந்தன.

இந்நிலையில் கடந்த ஜூலை 28-ம் தேதி தன் யூடியூப்பில் லைவ் வீடியோவில் வந்த பிரியாணி மேன், பேசிக் கொண்டிருக்கும் பொழுதே தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார். நல்வாய்ப்பாக அவரை அவரது தாயார் காப்பாற்றினார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
Briyani Man

இந்த விவகாரத்தின் சூடு அடங்குவதற்குள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாக கூறி, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் யூடியூபர் பிரியாணி மேன் என்கிற அபிஷேக் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

எதற்காக கைது? என்ன நடந்தது?

சென்னை தெற்கு மண்டலம் கணினி சார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் பெண், “நான் தினம்தோறும் காலையில் நடைபயிற்சி செய்யும் செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஆபாசமான உடல் மொழி சைகைகளை வீடியோவாக பதிவு செய்து, அந்தக் காணொளியை யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளார் பிரியாணி மேன் என்ற யூட்யூப் சேனல் நடத்தி வரும் அபிஷேக் ரபி. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், தெற்கு மண்டல கணினிசார் காவல்நிலையத்தில் BNS ACT, IT Act, பெண்களை தவறாக சித்தரித்தல் தடை சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் சார்பில் இது புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஆபாசமான உடல் அசைவு சைகைளைக்காட்டி, கொச்சை வார்தைகளுடன் youtubeல் வீடியோ பதிவேற்றம் செய்த அபிஷேக் ரபி (வயது 29) என்பவரை நேற்று (29.07.2024) இரவு கைது செய்தனர்.

விசாரணைக்குப் பின்னர் பிரியாணி மேன் என்கிற அபிஷேக் ரபி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.