கைது செய்யப்பட்ட இளைஞர்கள்  PT Desk
தமிழ்நாடு

புதிய கார் மற்றும் லாரி வாங்கி போதைப்பொருள் கடத்தல்... 4 இளைஞர்கள் கைது - சிக்கியது எப்படி?

நாமக்கல்லில் விரைவில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு புதிய லாரி, கார் வாங்கி குட்கா கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

PT WEB

பெங்களூருலிருந்து, நாமக்கல் வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக நாமக்கல் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நாமக்கல் டி.எஸ்.பி தன்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று நள்ளிரவு பொன்நகர் பகுதியில் வாகன சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

பின்னர் காரில் வந்த நபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் திருநெல்வேலியைச் சேர்ந்த சோமன் மற்றும் அருள்ரவி என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த சரக்கு லாரியை மடக்கிப்  பிடித்துள்ளனர். போலீசாரை கண்டதும் லாரி டிரைவர் உள்ளிட்ட இருவர் தப்பியோட முயன்றுள்ளனர். அவர்களையும்  போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து கார் மற்றும் லாரியை சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து காரையும், லாரியையும் பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில்  திருநெல்வேலியைச் சேர்ந்த சோமன்(24) அருள் ரவி(34),  செல்வலிங்கம் (24), யேசையா வேதகன் ஆகிய 4 பேரும் சேர்ந்து பெங்களூரிலிருந்து குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கடத்தி வந்து நெல்லையில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்தது தெரியவந்ததுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்

இதனையடுத்து லாரியில் இருந்த 8 லட்ச ரூபாய் மதிப்பிலான 1050 கிலோ குட்கா மற்றும் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான சரக்கு லாரி, 12 லட்ச ரூபாய் மதிப்பிலான சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.