கைது செய்யப்பட்ட ராஜா மற்றும் சந்துரு  PT WEB
தமிழ்நாடு

பெருங்குடி: மதுபோதையில் ரகளை செய்த நபர்.. கொலை செய்து உடலை தலைகீழாகப் புதைத்த சக கட்டட தொழிலாளர்கள்!

பெருங்குடியில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதலில், சக தொழிலாளிகளே ஒருவரை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமல் ராஜ்

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் முத்து. இவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக காமராஜ் நகர் 3வது குறுக்கு தெரு, பகுதியில் தங்கிக் கட்டட வேலை செய்து வந்துள்ளார். இவருடன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 6 பேர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இதில், முத்துவுடன், கோயம்புத்தூரைச் சேர்ந்த சந்துரு மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜா ஆகிய 2 பேர் ஒன்றாகத் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். அப்போது முத்து, சக தொழிலாளிகளான சந்துரு, ராஜா ஆகிய இருவரையும் மிரட்டி வந்துள்ளார். "நான் தான் பெரிய ரவுடி என்னை மீறி எதுவும் செய்யக்கூடாது" எனக் கத்தியைக் காட்டி மிரட்டி அடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

உடலை தலைகீழாக புதைத்த நண்பர்கள்

இந்தநிலையில், கடந்த 24ம் தேதி முத்துவும், சந்துருவும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் சந்துரு, முத்துவிடம் இருந்த கத்தியைப் பிடுங்கி, முத்து முகத்தில் பலமாக வெட்டியுள்ளார். அப்போது, ராஜாவும் சேர்ந்து முத்துவை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து, உயிரிழந்த முத்துவின் உடலை, அருகிலேயே குழி தோண்டி புதைத்து விட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

முத்துவின் உடலை தோண்டி எடுத்த அதிகாரிகள்

முத்துவின் உடலை தோண்டி எடுத்த அதிகாரிகள்

இந்த சம்பவம் தொடர்பாக, கட்டட பொறியாளர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சந்துருவின் செல்போன் சிக்னலை வைத்து, கோயம்புத்தூர் சென்று, சந்துரு மற்றும் ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.

பின்னர் சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சிவகுமார், முன்னிலையில் முத்துவின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழியில் இருந்து முத்துவின் உடல் மீட்கப்பட்ட போது தலைகீழாக இருந்துள்ளது.