கால்பந்து திடல் PT
தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி| கால்பந்து திடல்கள் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு.. இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை மாநகராட்சி சார்பில் 9 கால்பந்து திடல்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. கால்பந்து திடல்கள் தனியார் மயமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டையில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Rajakannan K

செய்தியாளர்: ந.பால வெற்றிவேல்

ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. அதில் மிக முக்கியமான தீர்மானமாக “சென்னையில் அமைந்துள்ள 9 கால்பந்து திடல்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும்” தீர்மானம் இருந்தது.

இது அங்குக் கால்பந்து பயிற்சி பெற்று வரும் விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அங்கு விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வரும் கால்பந்து வீரர்கள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கால்பந்து திடல்

9 கால்பந்து திடல்கள் பின்வருவன,

1. முல்லை நகர், வியாசர்பாடி செயற்கை கால்பந்து மைதானம்

2 நேவல் மருத்துவமனை சாலையில் உள்ள செயற்கை கால்பந்து மைதானம்

3. தி.ரு.வி.க. நகர் விளையாட்டு மைதானம் செயற்கை கால்பந்து மைதானம்

4. ரங்கசாயி விளையாட்டு மைதானம்

5. கேபி பார்க் விளையாட்டு மைதானம் செயற்கை கால்பந்து மைதானம்

6. மேயர் சத்தியமூர்த்தி சாலை (டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு மைதானம்)

7. அம்மா மாளிகை, கோடம்பாக்கம் மெயின் ரோடு

8 காமகோட்டி நகர், 6வது தெரு செயற்கை கால்பந்து மைதானம்

9. சோழிங்கநல்லூர் ஃபஸ்டல் (OMR) செயற்கை கால்பந்து மைதானம்

மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என கால்பந்து வீரர்கள் கவலை..

கால்பந்து திடல்கள் தனியார் மயமாக்கப்படுவது குறித்து அந்தபகுதியில் உள்ள கால்பந்து வீரர்கள் கூறுகையில், “நாங்கள் நீண்ட காலமாக இங்கு தான் கால்பந்து பயிற்சிகள், உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இப்படி தனியார் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டால் கால்பந்து வீரர்கள், இளைஞர்கள் என அனைவரும் கட்டணம் கொடுத்தே வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என வீரர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

மேலும் திறமை இருக்கும் ஏழை, எளிய வீரர்களின் விளையாட்டு வாய்ப்பை பறிக்கும் செயல்பாடாக உள்ளதால், இதைக் கண்டித்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறுகின்றனர்.

கால்பந்து திடல்

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 738 பூங்காக்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், 220 விளையாட்டுத் திடல்கள் மற்றும் 204 குழந்தைகள் விளையாட்டு திடல்கள் உள்ளன. இது முறைப்படி பராமரிக்கப்பட்டும் வருகிறது. இதில் செயற்கை புல் தரை கால்பந்து திடல்களில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

கால்பந்து திடல்

ஒரு மணி நேரம் ஒரு நபருக்கு 120 ரூபாய் கட்டண தொகையாக வசூலிக்கப்படும் நிலையில், 10 பேர் கொண்ட குழுவாக கால்பந்து விளையாட சென்றால் ஒரு மணி நேரத்திற்கு 1200 ரூபாய் செலவாகும் என வீரர்கள் கூறுகிறார்கள். நாள்தோறும் மாதம் முழுவதும் பயிற்சி மேற்கொண்டால் லட்சக்கணக்கான ரூபாய் இருந்தால் மட்டுமே சாத்தியம் என இளைஞர்கள் கூறுகிறார்கள்.

கால்பந்து திடல்

இந்தியாவில் பிரபலம் இல்லாமல் இருக்கும் கால்பந்தை ஊக்குவிப்பதற்கு இலவச திடல்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்கிறார்கள் சென்னை வாழ் விளையாட்டு ஆர்வலர்கள்.