தமிழ்நாடு

ஆக்கிரமிப்பை அகற்றி விளையாட்டு மைதானம் அமைத்து தாருங்கள் - 15 ஆண்டுகளாக போராடும் இளைஞர்கள்

ஆக்கிரமிப்பை அகற்றி விளையாட்டு மைதானம் அமைத்து தாருங்கள் - 15 ஆண்டுகளாக போராடும் இளைஞர்கள்

webteam

திண்டிவனம் அடுத்த முருக்கேரியில் விளையாட்டு மைதானம் அமைத்து தரக்கோரி இளைஞர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முருக்கேரி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உள்ளனர். இவர்கள் விளையாடுவதற்கு எந்த ஒரு மைதானமும் அப்பகுதியில் இல்லை. பலமுறை தாசில்தார், ஊராட்சி அலுவலர் ஆகியோரிடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரி மனு அளித்ததாக தெரிகிறது. ஆனால் இதுநாள் வரையில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முருக்கேரி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான கல்லாங்குத்து புறம்போக்கு நிலம் சுமார் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தை தனி நபர் ஒருவர் சுமார் 15 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருப்பதால் இளைஞர்கள் விளையாட முடியாமல் வெளியூருக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், விளையாட்டு மைதானம் அமைத்து தரக்கோரி இளைஞர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அரசு நிலத்தின் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு அங்கு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.