தமிழ்நாடு

 “என்னைப்போல் இனி யாரும் ஏமாறக்கூடாது” - வங்கி வளாகத்தில் பணத்தை பறிகொடுத்த இளைஞர் 

webteam

வங்கி ஊழியர் எனக்கூறி இளைஞரிடம் 30 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற நபரை காவல்துறை தேடி வருகிறது. கவனத்தை திசை திருப்பி மோசடி செய்யப்பட்டது எப்படி? பார்க்கலாம்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்று ஒரு பழமொழி உள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் சென்னையில் நடந்திருக்கிறது ஒரு நூதன மோசடி. அந்த குற்றச்சம்பவம், எப்போதுமே கண்காணிப்பில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நடந்திருப்பது தான் சாமானிய மக்களை திகிலடையச் செய்திருக்கிறது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் சாத்ராஜ், பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர். ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் உள்ள இந்தியன் வங்கி கிளைக்குச் சென்ற இவர், புதன்கிழமை 30 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். பணத்தை எடுத்த கையோடு அங்கிருந்து புறப்படாமல், வங்கிக் கணக்கு புத்தகத்தில் முகவரியை மாற்ற வேண்டுமென மேலாளரை அனுகியுள்ளார் சாத்ராஜ். ஆனால், உரிய இருப்பிடச் சான்று இல்லாமல் முகவரியை மாற்ற முடியாது என வங்கி மேலாளர் சொன்னது, சாத்ராஜுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

அடுத்த என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அழையா விருந்தாளியாய் வந்தார், அடையாளம் தெரியாத நபர் ஒருவர். தான் அந்த வங்கியின் ஊழியர் என அறிமுகம் செய்து கொண்ட அவர், உங்க அப்பா எனக்கு ஃபிரண்ட் தான், வாங்க நான் ஹெல்ப் பன்றேன் என சாத்ராஜை தனியே அழைத்துச் சென்றுள்ளார். அந்த நபர், சாத்ராஜின் அப்பா மற்றும் உறவினர்களின் பெயரை சரியாகச் சொல்லி பேசியதால், சந்தேகம் எதுவும் ஏற்படவில்லை. கனிவான பேச்சையும், டிப் டாப் உடையையும் கண்ட சாத்ராஜ், அந்த நபரை முழுமையாக நம்பிவிட்டார். 30 ஆயிரம் ரூபாய் இருப்பதைத் தெரிந்து கொண்ட அவர், அருகில் உள்ள தனியார் பள்ளி மைதானத்துக்கு சாத்ராஜை அழைத்துச் சென்றார். அங்கு தான் அவரின் நாடகம் அரங்கேறி இருக்கிறது. பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்வதாக கூறி, 30 ஆயிரத்தை வாங்கிக் கொண்ட அந்த நபர், ரூ.10 ஸ்டாம்ப் வாங்கி வருமாறு கூறி, சாத்ராஜை கடைக்கு அனுப்பி வைத்துள்ளார். சாத்ராஜ் கடையில் இருந்து திரும்பி வருவதற்குள், அந்த நபர் பணத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

கஷ்டப்பட்டு சேர்த்த பணம் பறிபோய்விட்டது எனவும் என்னை போல் இனி யாரும் ஏமாறக்கூடாது எனவும் சாத்ராஜ் கூறுகிறார். சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், மோசடி நபர் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.