செய்தியாளர்: துரைசாமி
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ராசி குமாரிபாளையம், முருகன் நகரை சேர்ந்தர் அகல்யா (27). பி.இ, எம்.பி.ஏ., பட்டதாரியான இவருக்கும், நாமக்கல் டவுன் ஏ.எஸ்.பேட்டை முல்லை நகரை சேர்ந்த ராஜா (35) என்பவருக்கும் கடந்த 24.02.2021 ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.
திருமணத்துக்குப் பின், ராஜாவும், அகல்யாவும், நாமக்கல், திருச்செங்கோடு சாலையில் வசித்து வந்தனர். ஆனால், திருமணத்துக்குப் பின், அவர்கள் இருவரையும் ராஜாவின் தாயார் சாந்தி, ராஜாவின் சித்தி தமிழ்செல்வி, ராஜாவின் மாமா கந்தசாமி ஆகியோர் சேரவிடாமல் தடுத்து வந்துள்னர்.
திருமணத்துக்கு முன், இந்திய ஆட்சிப் பணியில் (ஐ.ஏ.எஸ்.,) இருப்பதாகவும், அதற்கு முன்பாக பாரத் ஸ்டேட் வங்கி, ஹைதராபாத் மண்டலத்தில் ஜோனல் மேனேஜராக இருந்ததாகவும் மாதம் 1.80 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும், சென்னையில் உள்ள ராஜ்பவனில் மத்திய ஆட்சிப் பணியில் இருப்பதாகவும் ராஜா கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பான மாவட்ட கலெக்டர், நோடல் ஆபீசர், பேங்க் மேனேஜர் ஆகிய அடையாள அட்டைகளை, அகல்யாவின் பெற்றோரிடம் காண்பித்து, அவர்களை நம்ப வைத்து, நம்பிக்கை மோசடி செய்துள்ளார். அதற்கு, ராஜாவின் தாயார் சாந்தி, சித்தி தமிழ்செல்வி, மாமா கந்தசாமி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
திருமணத்திற்கு பின், ராஜாவின் நடவடிக்கையில் மாற்றம் காணப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், சந்தேகமடைந்த அகல்யா, ராஜாவின் மொபைல் போனை எடுத்து சோதனை செய்துள்ளார்.
அப்போது, அவர் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதவில்லை என்பதும், வங்கியிலும் வேலை செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அகல்யா, இதுகுறித்து ராஜாவிடம் கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதுடன், ராஜா, அகல்யாவை அடித்து துன்புறுத்தியும் உள்ளார். இந்நிலையில், உயிருக்கு பயந்த அகல்யா, மோகனூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து மோகனூர் போலீசில் புகார் செய்துள்ளார்.
புகாரின் பேரில், போலி ஆவணம் தயாரித்தல், நம்பிக்கை மோசடி செய்தல், ஏமாற்றுதல், அடித்து துன்புறுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான ராஜா உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர்.