தமிழ்நாடு

பட்டப்பகலில் இளைஞரை கட்டி வைத்து தாக்கிய டிராஃபிக் போலீஸ்: வைரல் வீடியோ

பட்டப்பகலில் இளைஞரை கட்டி வைத்து தாக்கிய டிராஃபிக் போலீஸ்: வைரல் வீடியோ

rajakannan

சென்னையில் வாகன‌ சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட இளைஞரை அவரது தாய், சகோதரி முன்னே காவலர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இளைஞர் தாக்கப்படும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியானது. வீடியோ காட்சியில் தாக்கப்படும் இளைஞர், வடபழனியைச் சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. ‌‌போக்குவரத்து காவலர்களின் இந்த அத்துமீறிய செயலுக்கு சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்‌, காவலர்‌களு‌டன் மோதலில் ஈடுபட்டதாக, தாக்குதலுக்கு ஆளான இளைஞர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்‌ளார்.

இந்நிலையில், மோதல் சம்ப‌வம் தொடர்பாக கா‌வல்துறை தரப்பில் விளக்கம் அளிக்‌கப்பட்டுள்ளது.  ‌இருசக்கர வாகனத்தில் வந்த பிரகாஷ் தலைக்கவசம் அணியவில்லை என்றும், தாய், சகோதரி என மூவருடன் சட்டவிரோதமாக பயணித்ததாகவும் காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதற்கு அபராதம் விதிக்க முற்படும்போது காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரகாஷ் திடீரென தாக்குதல் நடத்தியதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ‌அங்கிருந்த சிசிடிவி கேம‌ரா காட்சிகளின் அடிப்படையில்‌‌ விசாரணை நடத்திய மாம்பலம் போலீஸார்,‌ பிரகாஷ்‌ மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

பிரகாஷின்‌‌ தாயை காவலர்கள் தள்ளி விட்டதாகவும், அதனால் ஆவேசமடைந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுமே இந்தப் பிரச்னைக்கு காரணம்‌‌ என கூறப்படும் நிலையில் அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.