கோவையில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று குப்பைகளை நீர்நிலைகளில் கொட்டி வருவதை கண்டித்து இளைஞர்கள் சிலர் பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலில் குப்பைகளை கொட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கோவை நொய்யல் ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான மசவொரம்பு ஆற்றின் பிறப்பிடம் சாடிவயல் அருகே உள்ளது. மத்வராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஓடும் இந்த ஆற்றின் ஓடையில், அப்பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக நிர்வாகம் குப்பைகளை கொட்டுவதாக தொடர்ந்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
பல்கலைக்கழக நிர்வாக குப்பைகளை மட்டுமின்றி, அந்த கல்லூரி மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கல்லூரியை சுற்றியுள்ள சுமார் 50 கடைகளின் குப்பைகளும் அந்த ஆற்றின் ஓடையில் கொட்டப்படுவதால், ஓடை மாசுப்படுவதுடன், நிலத்தடி நீரும் மாசுப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே தனியாக குப்பைக்கிடங்கு அமைத்து குப்பைகளை கொட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து பல்கலைக்கழக தரப்பில் கல்லூரியை ஒட்டி குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டு கல்லூரி குப்பைகள் மட்டுமின்றி கடைகளின் குப்பைகளும் கொட்டப்பட்டு வந்தது.
ஆனால், திடீரென மீண்டும் சில மாதங்களாக குப்பைகள் ஓடையில் கொட்டப்படுவதாகவும், பல்கலைக்கழகம் மற்றும் ஊராட்சியிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ட்ராக்டரில் குப்பைகளை ஏற்றி வந்து பல்கலைக்கழக நுழைவு வாயிலில் கொட்டினர். இது குறித்து பல்கலைக்கழகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.