தமிழ்நாடு

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி இளைஞர் பலி – மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி இளைஞர் பலி – மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

webteam

கீழ் பவானி வாய்க்காலில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார். வாய்க்கால் கரையில் இருசக்கர வாகனம், 2 செல்போன்கள் கிடந்ததால் மேலும் ஒருவர் நீரில் மூழ்கி இருக்கலாம் என சந்தேகித்து தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த மாரனூர் மேட்டுக்கடை வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்கால் கரையில் தண்ணீருக்குள் இறங்கிய நிலையில் இன்று மாலை இருசக்கர வாகனம் ஒன்று இன்ஜின் இயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளது. இருசக்கர வாகனத்தின் அருகே 2 செல்போன் விழுந்து கிடந்தது.

இதைக் கண்ட அவ்வழியாக சென்றவர்கள் சத்தியமங்கலம் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக தற்போது 2,300 கன அடி தண்ணீர் கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்டுள்ளதால் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் வாய்க்கால் கரையில் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி வாய்க்காலில் விழுந்திருக்கலாம் என சந்தேகித்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இறங்கி தேடினர். ஒரு மணி நேரம் கழித்து 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலத்தை மீட்ட போலீசார் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் நீரில் மூழ்கி இறந்த இளைஞர் சத்தியமங்கலம் அருகே உள்ள சொலவனூர் பகுதியைச் சேர்ந்த மோகன் (30) என்பது தெரிய வந்தது. இருசக்கர வாகனம் அருகே இரண்டு செல்போன்கள் கிடந்ததால் மோகனுடன் இன்னொருவரும் வந்திருக்கலாம் என சந்தேகித்த தீயணைப்பு வீரர்கள் கீழ்பவானி வாய்க்கால் தண்ணீரில் இறங்கி தேடி வருகின்றனர்.