இளவரசனின் உடல் புதைக்கப்பட்ட இடம்  file image
தமிழ்நாடு

"கையால் மண்ணை தோண்டி புதைத்தோம்" இளைஞரை கொலைசெய்த நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்; அதிர்ச்சி பின்னணி!

காவேரிப்பாக்கம் அருகே பழகிய நண்பனை 4 பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் இளவரசன் (28) டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 6 தேதி வேலைக்குச் செல்வதாகப் பெற்றோரிடம் இளவரசன் கூறிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் இளவரசன் வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர்  காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

இதனைத் தொடர்ந்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இளவரசன் பணிபுரியும் இடம் மற்றும் அவரின் நண்பர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில், அதே  பகுதியைச் சேர்ந்த  லோகேஷ்(27)  பூவரசன்(24) வாசுதேவன்(27) ஆகிய மூன்று நபர்களும், கடந்த ஜனவரி மாதம் மயிலார் தினத்தன்று இளவரசனிடம்  தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து காவல்துறையினர்  லோகேஷ், பூவரசன், வாசுதேவன் ஆகிய மூன்று பேரிடம் விசாரணை செய்வதற்காக அவர்களது வீட்டிற்கு  போலீசார்  சென்றுள்ளனர். அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களது உறவினர்களிடம் விசாரணை செய்த போது மூன்று பேரும் இளவரசன் காணாமல் போன நாளிலிருந்து வீட்டிற்கு வரவில்லை எனக் கூறியுள்ளனர். இதனால் போலீசாருக்கு  சந்தேகம் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கிரன் ஸ்ருதி  உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள்  அமைத்து 3 பேரையும் தேடி வந்தனர். காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருவதை அறிந்து கொண்ட லோகேஷ், பூவரசன், வாசுதேவன் மற்றும்  நிமிலி அடுத்த பனையூர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(33) ஆகிய நான்கு பேரும் அத்திப்பட்டு ஊராட்சி கிராம நிர்வாக அலுவலரிடம் இளவரசனைக் கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.

பின்னர் கிராம நிர்வாக அலுவலர் காவேரிப்பாக்கம்  காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்து நான்கு பேரையும் காவல் நிலையத்தில் சரணடையச் செய்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ”கடந்த 6 தேதி அத்திப்பட்டு கிராமப் பகுதியில் உள்ள அரிச்சந்திரன் மண்டபம் அருகே லோகேஷ், பூவரசன், வாசுதேவன், அருண்குமார் ஆகிய நான்கு நபர்களும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளவரசனிடம் நான்கு நபர்களும் வலுக்கட்டாயமாக வம்பிற்கு இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு  பீர் பாட்டில் மற்றும் கத்தி போன்ற கைகளால்  இளவரசனைச்  சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இளவரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கதறி அழுத இளவரசனின் தாய்

இதனைத் தொடர்ந்து நான்கு பேரும் உயிரிழந்த இளவரசனின் உடலை தங்களுடைய இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்று யாருக்கும் தெரியாமல் திருப்பாற்கடல் அருகே செல்லும் பாலாற்றின் கரையோரம் கைகளால் பள்ளம் தோண்டி இளவரசனின் உடலைப் புதைத்து விட்டுச் சென்றுள்ளனர்” என்பது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து நான்கு பேரும் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர், மற்றும் வருவாய்த் துறையினர் மருத்துவ குழுவினர் அனைவரும் இளவரசன் உடல் புதைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குச் சென்று உடலைத் தோண்டி எடுத்து பிரேதப்  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த இளவரசன்

பின்னர் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த  போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.