தமிழ்நாடு

வயல்காட்டில் விளையாட்டு.. கண்காணித்த ட்ரோன் கேமரா - கல்லால் தாக்க முயன்ற இளைஞர்கள்..!

வயல்காட்டில் விளையாட்டு.. கண்காணித்த ட்ரோன் கேமரா - கல்லால் தாக்க முயன்ற இளைஞர்கள்..!

webteam

சீர்காழியில் ஊரடங்கு உத்தரவை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர். அப்போது இளைஞர்கள் கேமிராவை கல்லால் தாக்க முயற்சித்துவிட்டு தலைதெறிக்க தப்பி ஓடினர்.

உலக நாடுகள் அனைத்தையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது கொரோனா வைரஸ். இதன் தாக்கத்தை தடுக்க இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. இதனால் போலீசார் பல கெடுபிடிகளை கடைபிடித்து வருகின்றனர். அரசின் உத்தரவுகளை பலரும் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் பின்பற்றாமல் வீணாக சுற்றி வருவதும், பொதுவெளியில் கூட்டமாக விளையாடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதனை தடுக்க போலீசார் ட்ரோன் கேமரா மூலம் ஊரடங்கு உத்தரவை கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் போலீசார் ட்ரோன் கேமரா மூலம் சீர்காழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

அப்போது சீர்காழி மற்றும் எடமணல் ஆகிய இடங்களில் இளைஞர்கள் கூட்டமாக கிரிக்கெட் மற்றும் கபடி போன்ற விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து ட்ரோன் கேமரா சத்தத்தைக் கேட்டு அங்கிருந்து அவர்கள் தலைதெறிக்க ஓடி ஒளிந்தனர். வயல்வெளியில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் ட்ரோன் கேமிராவை கல்லால் அடித்து தாக்க முயற்சித்தனர். கேமிரா அருகே நெருங்கியதும் தலைதெறிக்க ஓடி ஒளித்தனர்.

இதுபோன்ற செயல் தொடர்ந்தால் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென அவர்களை போலீசார் எச்சரித்தனர். மேலும் தொடர் கண்காணிப்பு பணிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.