கைது செய்யப்பட்ட இளைஞர் அரவிந்த் குமார்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

தேர்தல் பரப்புரைக்கு கழுத்தில் பாம்புடன் வந்த இளைஞர் - நள்ளிரவில் சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்!

ஓமலூர் அருகே தேர்தல் பரப்புரைக்கு பாம்பைக் கழுத்தில் போட்டுக் கொண்டு வந்த இளைஞரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விமல் ராஜ்

சேலம் செய்தியாளர் - தங்கராஜு

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் செல்வகணபதி தொடந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதில், ஓமலூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் மாலை மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். கூட்டத்தின் இடையே அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வயல்வெளியில் சுற்றித்திரிந்த சாரை பாம்பு ஒன்றைப் பிடித்து, கழுத்தில் போட்டுக் கொண்டு வலம் வந்தார்.

தேர்தல் பரப்புரைக்கு பாம்புடன் வந்த இளைஞர்

கழுத்தில் பாம்புடன் வலம் வந்த இளைஞர்!

பின்னர், கழுத்தில் கிடந்த பாம்பை இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றிப் பிடித்துக் கொண்டே தேர்தல் பரப்புரை நடந்த பகுதிக்கு வந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தொண்டர்கள் சிதறி ஓடியுள்ளனர். அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். ஆனாலும் பிரசாரம் முடியும் வரை அந்த இளைஞர் அதே பகுதியில் வலம் வந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

நள்ளிரவில் இளைஞரை சுற்றி வளைத்து கைது செய்த போலிஸ்

இந்த சம்பவம் தொடர்பான செய்தி, நமது "புதிய தலைமுறை"யில் வெளியானது. இதனைத் தொடர்ந்து சேலம் தெற்கு வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையினர் பாம்பைப் பிடித்து வைத்திருந்த இளைஞரைத் தேடி வந்தனர். அதன்படி நேற்று நள்ளிரவு அந்த இளைஞரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தேர்தல் பரப்புரை

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் குமார் என்பதும், உறவினர் வீட்டிற்கு வந்தபோது, அங்கு வயலில் திரிந்த சாரை பாம்பைப் பிடித்து கழுத்தில் போட்டுக் கொண்டு வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து, அரவிந்த் குமாரைச் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, 14 நாள் நீதிமன்ற காவலில் சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.