டிக் டாக் மோகத்தால், புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுத்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சி ராஜாளிகுடியிருப்பைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். டிக் டாக் செயலியால் அதிகம் ஈர்க்கப்பட்ட கண்ணன், புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்துள்ளார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரிடம் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இளைஞர் குறித்த புகார்கள் புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமாரின் கவனத்திற்கு செல்லவே, அவர் கண்ணனை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கண்ணன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கண்ணன் சிறையில் அடைக்கப்படலாம் என அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதனிடையே டிக்டாக் தளத்தில் பயனாளர்கள் சமூக பொறுப்புணர்வுடன் பதிவுகள் இடுவது உறுதி செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள வரைமுறைகள், தவறாமல் பின்பற்றப்படும் என்று டிக்டாக் நிறுவனத்தின் இந்திய தலைவர் நிகில் காந்தி கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நிகில் காந்தி, கடந்த 2 ஆண்டுகளில் டிக்டாக் இந்தியாவில் 100 மடங்கு வளர்ந்துள்ளதாக தெரிவித்தார்.