Accused with police pt desk
தமிழ்நாடு

ஒசூர்: கால்நடைத் தீவன தொழிற்சாலைக்குள் கஞ்சா செடிகள்- வடமாநில தொழிலாளி கைது

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஆனேகொலு என்னும் கிராமத்தில் கால்நடைத் தீவனம் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். குடும்பமாக தங்கியுள்ள இவர்களுக்கு நிறுவனத்திற்குள்ளேயே குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

கஞ்சா செடி

இந்நிலையில், தொழிற்சாலைக்குள் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக ஒசூர் மதுவிலக்கு மற்றும் போதைதடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதன் அடிப்படையில், தொழிற்சாலைக்குள் சென்ற போலீசார், ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மரம் போல் வளர்த்து நின்ற கஞ்சா செடிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 12 அடி உயரத்தில் இருந்த 5 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், புக்கர் யாதவ் (45) என்பவர், வட மாநிலத்தவர்களுக்கும், தனது பயன்பாட்டிற்கும் கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் 7 கிலோ இருந்த நிலையில், புக்கர் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.