தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் வென்ற நம்பிக்கை நட்சத்திரங்கள்; கவனம் ஈர்த்த இளைஞர்களின் வெற்றி

உள்ளாட்சி தேர்தலில் வென்ற நம்பிக்கை நட்சத்திரங்கள்; கவனம் ஈர்த்த இளைஞர்களின் வெற்றி

Sinekadhara

உள்ளாட்சி தேர்தலில் நம்பிக்கை நட்சத்திரங்களாக வென்று கவனம் ஈர்த்த இளைஞர்களின் வெற்றி குறித்து பார்க்கலாம். 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதில், பல்வேறு இடங்களில் இளைஞர்கள் பெற்றுள்ள வெற்றி கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு சான்றாக, தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்குட்பட்ட வெங்கடம்பட்டி ஊராட்சித் தலைவி பதவிக்கு 21 வயது இளம் பெண் சாருகலா பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டார். சாருகலா இளங்கலைப் பொறியியல் படிப்பு முடித்து தற்போது முதுகலைப் பொறியியல் படித்து வருகிறார். இந்த பகுதிக்குட்பட்ட லட்சுமியூரைச் சேர்ந்த தொழிலதிபரான ரவிசுப்பிரமணியன், சாந்தி தம்பதியரின் மகள் சாருகலா, ஆர்வமுடன், முற்போக்கு சிந்தனையுடன் பரப்புரை செய்தவர். 3,336 வாக்குகள் பெற்று 796 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பஞ்சாயத்து தலைவியாகியிருக்கிறார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 2 ஆவது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு 21 வயதாகும் தீபிகா என்பவர் வெற்றி பெற்றார். இவர் பிசிஏ பட்டம் பெற்றவர். நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மொத்தம் 451 வாக்குகள் உள்ள இந்த வார்டில் பல பெண்கள் போட்டியிட்டனர். என்றாலும் திமுக ஆதரவுடன் திறவுகோல் சின்னத்தில் போட்டியிட்ட நதியா என்ற பெண் 112 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பி.எஸ்.சி மைக்ரோபயாலஜி படித்த இவர் 22 வயது நிரம்பிய பட்டதாரி பெண். சமீபத்தில் தான் கல்லூரி முடித்திருக்கிறார். இளம் வயதில் போட்டியிட்டதுடன் இவரை எதிர்த்து போட்டியிட்ட திலகவதி என்ற பெண்ணை 2 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கவனம் பெற்றார்.

செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம் முடிச்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார் சிந்துலேகா(27). அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 246, வாக்குகள் அதிகம்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் 27 வயதேயான, பி.எச்.டி. பட்டதாரி அந்தோணி வினோத்குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக உள்ளிட்ட 8 எட்டு வேட்பாளர்கள் களமிறங்கினர். முதல் தேர்தலிலேயே தீவிர பரப்புரைகளை மேற்கொண்ட திமுக வேட்பாளருக்கு அதற்கான பலன் கிடைத்துள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக வேட்பாளரான அந்தோணி வினோத்குமார் 1,976 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டுளது. இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக உள்ளிட்ட 8 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.

இதேபோல நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலபுத்தநேரி ஊராட்சிமன்றத் தலைவர் தேர்தலில் 22 வயதான இளைஞர் வெற்றிபெற்றார். மனோஜ் குமார் என்ற இளைஞர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுப்புத்தாய் என்ற பெண்ணை 370 வாக்குகள் வித்தியாசத்தில் 693 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமையன்பட்டி டேவிட், 26 வயது.

நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்கு உள்பட்ட 5-வது வார்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமா சங்கரின் உடன்பிறந்த தங்கை உமாதேவி போட்டியிட்டார். சுயேச்சையாக போட்டியிட்ட உமாதேவி, 1,001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினார்.

உமா தேவி M.sc வரை படித்தவர். இதைவிட, அவரின் சகோதரரை போலவே சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி வருகிறார். கடந்த இரண்டுமுறை யுபிஎஸ்சி தேர்வு எழுதியுள்ள உமாதேவி, அதில் இன்டெர்வியூ வரை சென்று தோல்வியுற்றுள்ளார். என்றாலும் இப்போது தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

இதுதொடர்பாக புதிய தலைமுறையில் 360 டிகிரி நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்று பேசிய கருத்துக்களை இந்த வீடியோவில் காணலாம்.