தமிழ்நாடு

முழு பொதுமுடக்கம் இல்லாத முதல் ஞாயிறு.. கூட்டத்தால் மூச்சுமுட்டிய சென்னை மைதானங்கள்..!

முழு பொதுமுடக்கம் இல்லாத முதல் ஞாயிறு.. கூட்டத்தால் மூச்சுமுட்டிய சென்னை மைதானங்கள்..!

webteam

கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு கேரளாவில் தொடங்கியது. அதன் பின் மளமளவென இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. உலக அளவில் இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஊரடங்கு, தளர்வுகள் என இந்தியா 5 மாதமாக பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஒருபுறம் மத்திய அரசு அறிவிப்புகள் வெளியிட்டாலும் மாநில அரசுகளும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. பல மாநிலங்களில் இபாஸ் முறை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் இபாஸ் தொடர்ந்தது. பேருந்துகள் நிறுத்தப்பட்டே இருந்தன. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

பின்னர் செப்டம்பர் முதல் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை, இபாஸ் முறைகளை நீக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இபாஸ் ரத்து, பேருந்து சேவை தொடக்கம், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இல்லை என பல்வேறு தளர்வுகளை தமிழக அரசும் அறிவித்தது. ஆனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமென்றும், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டுமென்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இந்நிலையில் முழு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் ஞாயிறான இன்று சென்னையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை முதல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர். மாஸ்க், தனிமனித இடைவெளி என்ற எந்த கொரோனா வழிமுறைகளும் கடைபிடிக்கப்படவில்லை. சென்னை திநகரில் உள்ள சோமசுந்தரம் மைதானத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் என பெரும் கூட்டமே விளையாடிக்கொண்டு இருந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளன.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் சிக்கல் வரக்கூடாது என்பதற்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமென பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கொரோனா அச்சுறுத்தல் அப்படியே இருப்பதால் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரடங்கு தளர்வை அவசியத் தேவைக்கு, பாதுகாப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லை என்றால் மீண்டும் பழைய நிலையை சென்னை அடையும் என்றும் இணையத்தில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்