தமிழ்நாடு

வாட்ஸ்அப் குழு மூலம் குளத்தை தூர்வாரிய இளைஞர்கள்

வாட்ஸ்அப் குழு மூலம் குளத்தை தூர்வாரிய இளைஞர்கள்

webteam

வாட்ஸ் அப்பில் கிராம சேவைக்கான குழுவை அமைத்து, சாக்கடையாக மாறிய குளத்தை விருதுநகர் இளைஞர்கள் தூர்வாரியுள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நூர்சாகிபுரம் என்ற கிராமத்தில் தான் இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசிய ‌சாக்கடை இருந்துள்ளது அப்பகுதியில் உள்ள குளம். இது அழகிய குளமாக மாறியதற்கு சமூக வலைத‌ளமான வாட்ஸ் ‌அப்தான் காரணம் என்கின்றனர் கிராம மக்கள். குப்பைகளை அகற்றி, குளத்தை மீட்டெடுக்கும் முயற்சியை வாட்ஸ் அப் குழு மூலம் இளைஞர்கள் தொடங்கியதும், அதற்கு ஊர் மக்களும் தோள் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். 

தூர்வார அரசு தரப்பில் நிதி கிடைக்காததால், தினசரி கூலியில் இருந்து தங்களால் முடிந்த தொகையை கிராம மக்க‌ள் நன்கொடையாக கொடுத்து உதவியுள்ளனர். ஒரு கட்டத்தில் செலவு 2 லட்சத்தை தொட்ட நிலையில், வீட்டில் இருந்த நகைகளையும் அடகு வைத்து நிதி பற்றாக்குறையை சமாளித்துள்ளனர். குளத்தை மீட்டெடுப்பதற்காக முதலில் குப்பை கொட்டுவதை நிறுத்தும்படி ஊர் மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சொந்த செலவிலேயே குப்பைத் தொட்டி அமைத்து, அதை தினசரி அகற்றுவதற்காக பணியாளர் ஒருவரையும் நியமித்துள்ளனர் வாட்ஸ் அப் இளைஞர் குழுவினர்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை நிஜமாக்கும் வகையில், அரசின் உதவியை எதிர்நோக்காமல், ஒட்டுமொத்த கிராம மக்களும் ஒன்று சேர்ந்து குளத்தை தூர்வாரியிருப்பது விருதுநகர் மாவட்ட மக்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.