தமிழ்நாடு

ஹெட்செட் போட்டபடி ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் உயிரிழப்பு

ஹெட்செட் போட்டபடி ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் உயிரிழப்பு

நிவேதா ஜெகராஜா

பருத்திவயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற இளைஞர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஹெட்செட் அணிந்து சென்றதால் ரயிலின் சத்தம் கேட்காமல் அவர் இருந்ததாக சொல்லப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவருடைய மகன் வெங்கடேஷ், வயது 21. இவர் நேற்று இரவு மின்சார லைன் மாற்றிய பிறகு, 3 பேஸ் லைன் மின்சாரம் வந்த பிறகு பருத்தி வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு உள்ளார். அவருடைய வயலானது ரயில்வே ட்ராக் இருக்கும் பகுதியை கடந்து செல்வதுபோல இருக்கும்.

அப்படியான வயலுக்கு நேற்று இரவு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார் வெங்கடேஷ். அப்போது அவர் தன்னுடைய ஃபோனில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு பாடல்களை கேட்டு சென்று கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் மன்னையிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் அவ்வழியாக விரைந்து வந்து கொண்டிருந்தது. தன்னுடைய இரண்டு காதுகளிலும் ஹெட்செட் போட்டிருந்ததால், ரயில் வரும் சத்தம் அறியாமல் இருந்துள்ளார். அவர் ரயில்வே டிராக்கை கடக்க முயன்றுள்ளார். இதனால் அப்பொழுது மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இளைஞர் வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பிரேத பரிசோதனைக்காக உடலானது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: மாதவன்