தமிழ்நாடு

“காதல் மனைவியை பெற்றோரிடம் இருந்து மீட்டுத்தாருங்கள்” - இளைஞர் நீதிமன்றத்தில் மனு

“காதல் மனைவியை பெற்றோரிடம் இருந்து மீட்டுத்தாருங்கள்” - இளைஞர் நீதிமன்றத்தில் மனு

webteam

சென்னையில் வீட்டுக்காவலில் இருக்கும் தனது காதல் மனைவியை மீட்டுத்தர வேண்டும் என இளைஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை, பாலவாக்கம் கோலவிழியம்மன் நகரை சேர்ந்த ரமணி என்பவரின் மகன் ரவிசங்கர். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கல்லூரியில் படிக்கும்போது அடையாறு சாஸ்திரி நகரை சேர்ந்த ஸ்ரீனிவாசராஜா என்பவரின் மகளான பவித்ராவுடன் நட்பு ஏற்பட்டு, 2016ல் அது காதலாக மாறியதாக தெரிவித்துள்ளார். பெற்றோர் தங்களை பிரித்துவிடுவார்களோ என்ற பயத்தில் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி பவித்ராவை திருமணம் செய்து கொண்டதுடன், அதை சார்பு பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு படிக்க சென்ற பவித்ரா, கடந்த மார்ச் 2019ல் திரும்பியவுடன், பதிவு திருமணம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அதை அவர்கள் ஏற்க மறுத்ததாக கூறியுள்ளார். மேலும், கடந்த டிசம்பர் 20ஆம் தேதி தன்னை திடீரென அழைத்த பவித்ரா, பட்டம் பெற்று திரும்பிய தனக்கு, பெற்றோர் வேறு திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி வருவதாக தன்னிடம் கூறியதாகவும் அவர் மனுவில் சுட்டிக்காட்டிள்ளார்.

அதன்பின்னர் பவித்ராவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், எனவே பெற்றோரின் சட்டவிரோத காவலில் இருக்கும் மனைவி பவித்ராவை மீட்க வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையருக்கும், நீலாங்கரை காவல் ஆய்வாளருக்கும் உத்தரவிட மனுவில் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் சுப்பைய்யா, பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து ஜனவரி 31ல் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.