உயிரிழந்த இளைஞர் புதியதலைமுறை
தமிழ்நாடு

சிங்கம்புணரி: காவலுக்காக வயலுக்குச் சென்ற இளைஞர்.. விஷப்பாம்பு கடித்ததில் சிகிச்சை பலனின்றி பலி!

சிங்கம்புணரி அருகே நெல் வயலில் இரவு நேரத்தில் காவலுக்குச் சென்ற கல்லூரி மாணவரை பாம்பு கடித்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலன்றி உயிரிழந்துள்ளார்.

யுவபுருஷ்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடியைச் சேர்ந்தவர் கருணாநிதி - ரேவதி தம்பதியினரின் மகன் தீபன் கணேசன்(வயது 19). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்துள்ள இவர், நேற்று இரவு சூரக்குடிக்கு அருகே உள்ள தங்களுக்கு சொந்தமான வயலில் இரவு நேரங்களில் கோவில் மாடுகள் மேய்வதால் காவலுக்காக சென்றுள்ளார்.

அப்போது, வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் கட்டிலில் படுத்திருந்த தீபன் கணேசனை கொடிய விஷப்பாம்பு, கழுத்தில் தீண்டியுள்ளது. இதனால், சுதாரித்து எழுந்த தீபன் கணேசன், கடித்த பாம்பை கையில் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வயலில் காவலுக்கு படுத்திருந்தவரை அழைத்துக் கொண்டு எம்.சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு தீபன் கணேசனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதிகாலையில் சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த தீபன் கணேசனுக்கு அவசர சிகிச்சைகள் தொடங்கப்பட்டு சிகிச்சை நடந்து கொண்டு இருக்கும் பொழுதே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறாய்விற்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயிரிட்ட நெல் வயலை மாடுகளிடம் இருந்து காக்க காவலுக்கு சென்ற மகன், பாம்பு கடித்து இறந்ததைக் கண்டு அவரது பெற்றோர் மற்றம் உறவினர்கள் அழுது புலம்பிய காட்சி அங்கிருந்தவர்களை கண் கலங்கச் செய்தது. தீபன் கணேசனின் மரணத்தால் சூரக்குடி கிராமமே சோகத்தில் மூழ்கியது. பாம்பு கடித்து உயிரிழந்த இளைஞர் தீபன் கணேசனின் தந்தை கருணாநிதி வெளிநாட்டில் கூலி வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.